யாழ் நகரப் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட சிறீலங்கா குற்றத்தடுப்புப் பிரிவு காவற்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பிரதான சந்தேகநபர்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பிரதான சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் முறையே 6 கிராம் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களிடமிருந்து சிறியளவிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை
யாழ். வடமராட்சி கிழக்கு மாமுனையில் கடந்த செவ்வாய் இரவு 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினரால் மாமுனை தரவைப்பகுதி பருத்தித்துறை வீதியை அண்டிய பகுதியில் ஓர் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.
இச்சுற்றிவளைப்பின் போது மாமுனையினை சேர்ந்த வடமராட்சி கிழக்கு நடுவர் சங்க உறுப்பினர் முகுந்தன் 7.5 g ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளை மருதங்கேணி சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர் முகுந்தன் எனவும் இவரது மனைவி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் என தெரியவருகின்றது.





