தமிழ் சமூகத்தின் தொன்மையான கலாச்சார பாரம்பரியங்களை பேணும் வகையில், வட-கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இளைஞர்கள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் என சமூகத்தில் உள்ள அத்தனை இளைஞர்களும் சுயாதீனமாக முன்வந்து தைப்பொங்கல் நிகழ்வையும் பண்பாட்டு பெருவிழாவையும், யாழ் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 19ஆம் திகதி நடத்தவுள்ளனர்.
காலத்துக்கு காலம் நமது பண்பாட்டு கலாசார விழுமியங்கள் அழிந்த வண்ணமே உள்ளன. இவற்றைப் பேணி பாதுகாக்கும் முகமாகவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இளைஞர்களின் உறவை மென் மேலும் பலப்படுத்தவும் தமிழ் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்ற பல குழுக்களை ஒன்றிணைக்கவும் தன்னெழுச்சியாக முன்வந்த இளைஞர்கள் இப் பொங்கல் விழாவையும் பண்பாட்டுப் பெருவிழாவையும் திட்டமிட்டுள்ளார்கள்.
சுயாதீனமாக முன் வந்த இளைஞர்கள் “தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்”என்ற பெயரில் நடாத்தும் தைப்பொங்கல் விழாவிற்கு தேவையான அனைத்தையும் “ஒருபிடி அரிசியில் உரிமைப் பொங்கல்”என்னும் தொனிப்பொருளில் மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளனர்.