ராஜபக்ச சகோதர்கள் வீழ்ந்தால் தமிழினத்திற்கு தமிழீழம் கிடைக்குமா.?

You are currently viewing ராஜபக்ச சகோதர்கள் வீழ்ந்தால் தமிழினத்திற்கு தமிழீழம் கிடைக்குமா.?

சமூக ஊடகங்களில் ,  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் வீழ்த்தப்படவேண்டும் என ஆத்திரத்துடன்,ஆற்றாமையுடன் பதிவிடுவதை எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஆனால் அவர்கள் தவறான புரிதலுடன் ஒரு விடயத்தை அணுகுகிறார்கள்.

அது என்ன?

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் இலங்கை இறையாண்மை அரசா அல்லது ராஜபக்ச சகோதரர்களா?

இலங்கை இறையாண்மை அரசுதான் 

அந்த இலங்கை இறையாண்மை அரசின் பிரதிநிதிகளாக 2009 இல் ராஜபக்ச சகோதரர்கள் இருந்தார்கள். 

அன்றைய திகதியில் வேறொரு X,Y இலங்கை இறையாண்மை அரசுக்கு பொறுப்பாக இருந்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்ந்தேயிருக்கும்.

வரலாறு என்ன சொல்கிறது?

இலங்கையில் ஆயுதப்போராட்டம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு ஜனாதிபதியின்  ஆட்சிக்காலத்திலும் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டதும் , பாலியல் வல்லுறவுகளும், இளைஞர்கள் காணாமல் போனதும் நடந்திருக்கிறது. 

ராஜபக்ச சகோதர்கள் வீழ்ந்தால் தமிழினத்திற்கு தமிழீழம் கிடைக்குமா.? 1

 80 களில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சி காலத்தில் பல படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. 

1984 இல் நிகழ்ந்த மன்னார் படுகொலை( 1984 Mannar massacre), கொக்கிளாய்  படுகொலை (1984 Kokkilai massacres), திருகோணமலை படுகொலை (1985 Trincomalee massacres) என்பவை அவைகளுள் மிகச்சில.

பின்னர் பிரேமதாசவின் ஆட்சி காலம்.

ராஜபக்ச சகோதர்கள் வீழ்ந்தால் தமிழினத்திற்கு தமிழீழம் கிடைக்குமா.? 2

ஈழப்போர் 2 (Eelam War 2) தொடங்கியது 11-6-90 ஆம் திகதி.

புலிகள் முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றியது 30-10-90 ஆம் திகதி.

இந்த இடைப்பட்ட நான்கு மாதங்களில் கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவமும், முஸ்லீம் ஊர்காவல் படையினரும் சேர்ந்து நடத்திய படுகொலையில் இறந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைந்தது 4000 பேர். 

இதில்தான் சத்துருக்கொண்டான் படுகொலை, வந்தாறுமூலை படுகொலை , வீரமுனை படுகொலைகள் எல்லாம் வருகின்றன.

ஈழப்போர் வரலாற்றிலேயே பெருந் தொகையான தமிழ் மக்கள் கொல்லப்பட்டது இந்த நான்கு மாதத்தில்தான். அந்த பெரும் விலையை கிழக்கு மாகாணம் கொடுத்தது. இதற்கான சகல ஆதாரங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்து சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலம்.

1996  இல் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய பின்னர் நடந்ததுதான் செம்மணிப் படுகொலை. இன்னும் பல உள்ளன.

இதற்குப் பிறகு வருவதுதான் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம்.

ஏன் மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தது?

காரணம் இந்த காலப்பகுதியில்தான் விடுதலை புலிகளின் போர் ஆற்றல் பலவீனமடைந்திருந்தது.

ஏன் விடுதலை புலிகளின் போர் ஆற்றல் பலவீனமடைந்தது?

காரணம் உலக ஒழுங்கு 2007-2009 காலப்பகுதியில், விடுதலை புலிகளின் கடல் வழி ஆயுத விநியோகத்தை முற்றாக தடுத்து நிறுத்தியிருந்தது.

இந்த ஆயுத பற்றாக்குறை விடுதலை புலிகளின் போர் ஆற்றலை பெருமளவில் முடக்கியிருந்தது.அதனால் தமிழர்க்கான படைய வலு  சுருங்கிப்போனது. 

இலங்கையின் இறுதிபோரில் மகிந்த ராஜபக்சேயிற்கு பதிலாக வேறு ஒரு X, Y ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

எது முள்ளிவாய்க்காலில் நடந்ததோ அதேதான் நடந்திருக்கும். 

ஏனெனில் இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் நடத்திய போரில், விடுதலை புலிகள் ஒவ்வொரு முறையும் முன்பை விட பலமான போரியல் ஆற்றலுடன் எழுந்து வந்தார்கள். 

அவர்கள் , செயல் வீச்சு அழியும் நிலைக்கு செல்லவில்லை. 

அதனால் முள்ளிவாய்க்காலில் ஆடிய மிருக ஆட்டத்தை நடத்தும் வாய்ப்பு இலங்கை இராணுவத்திற்கு முன்பு கிடைக்கவில்லை.

இறுதிப்போரில் உலக ஒழுங்கு சமன்பாடுகள் மாறியிருந்தன. உலக ஒழுங்கு விடுதலை புலிகள் முற்றிலும் அழிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. 

அந்த போரில் விடுதலை புலிகள் முற்றிலும் அழியும் வாய்ப்பு வந்தவுடன், கிடைத்த வாய்ப்பை இலங்கை இராணுவம் தவறவிடவில்லை.

இதன் பொருள் என்ன?

இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சிங்கள பௌத்த மேலாண்மை எனும் கருத்தியலை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இல்லாவிடில் அது ஆட்சியாளர்களை தின்றுவிடும்.

சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியல் என்றால் என்ன?

சிங்கள இனம் இலங்கை எனும் நிலப்பரப்பை, சிங்கள இனத்திற்காக புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்ட பிரத்தியேகமான புனித பூமியாக கருதுகிறது. 

இந்த புனித பூமி மனநிலை மகாவம்சத்திலிருந்து இன்றுவரை சிங்கள மக்களின் மனங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலப்பரப்பில் அதிகாரத்தை வேறு எவருடனும் பங்கு போடுவதற்கு தயாராக இல்லை.   

ராஜபக்ச சகோதர்கள் வீழ்ந்தால் தமிழினத்திற்கு தமிழீழம் கிடைக்குமா?

நிச்சயம் இல்லை. இன்று இலங்கையிலுள்ள சகல இன மக்களும் ராஜபக்ச சகோதர்களுக்கு எதிராக போராடுவது கடுமையான பொருளாதார நெருக்கடியால்.

இதற்கும் தமிழீழத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

ஆனால் ராஜபக்ச சகோதரர்கள் தமிழினத்திற்கு எதிராக  தமிழின அழிப்பு  (genocide) நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதை நிறுவினால், அதன் மூலம் தமிழினம் சுயநிர்ணய உரிமையை பெறலாம். 

எப்படி?

Genocide இற்கான சர்வதேச வரையறை இதுதான்.

Genocide is an internationally recognized crime where acts are committed with the intent to destroy, in whole or in part, a national, ethnic, racial, or religious group. 

ஒரு இனம் மீது Genocide நிகழ்த்தப்பட்டிருந்தால் அந்த இனம் சுயநிர்ணய உரிமை (self determination) இற்கு முழு உரிமையுடையது என இந்த ‘உலக ஒழுங்கின் சர்வதேச விதிகள் ‘ ஏற்றுக்கொள்கின்றன.

Essentially, the right to self-determination is the right of a people to determine its own destiny. In particular, the principle allows a people to choose its own political status and to determine its own form of economic, cultural and social development.

இது நிகழுமா?

இந்த புள்ளியில்தான் உலக ஒழுங்கின் புவிசார் அரசியல் நலன் சதுரங்க ஆட்டம் வருகிறது.

ஒருவேளை உலக ஒழுங்கின் பலமான நாடுகள் தங்களது புவிசார் நலன் தேவைக்காக இந்த genocide என்ற கதையாடலை உள்கொண்டு வருமாயின் இது நிகழும்.

மற்றும்படி ‘கர்ம வினை’ , ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ போன்ற உப்புச்சப்பற்ற வாசகங்களோடு இதை அணுகினால், தமிழினம் தன்னை தானே சமாதானப்படுத்தி ஏமாற்றிகொள்ள உதவும். ஆனால் தமிழீழம் எட்டாக்கனிதான். எனவே, நாங்கள் என்ன செய்யவேண்டும் .

 தேசியத்தலைவர் சொன்னது போல சின்னப்பாம்பென்றாலும் பெரிய தடி கொண்டு அடிக்க வேண்டும் .

ராஜபக்ச சகோதர்கள் வீழ்ந்தால் தமிழினத்திற்கு தமிழீழம் கிடைக்குமா.? 3

ஏனெனில் செத்த பாம்பு கூட காற்றில் உயிர்ப்பதாகச் சொல்வார்கள் . ஆகவே செத்ததை உறுதிப்படுத்தி பாம்பை எரிப்பது எமது வழக்கம் . சில அரசியல் கருத்துருவாக்க கூழ்முட்டைகள் சொன்னது போல, காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் உணவகம் போட்டிருந்தால், இன்று என்ன நடந்திருக்கும். மகிந்தவின் அடியாட்களை ஓட ஓட விரட்டி உரிஞ்சு போட்டு , பின்னியெடுத்த சிங்களப்பேரினவாதம், காலிமுகத்திடலில் தமிழர்மீது தன்வெறியைத் தீர்த்திருக்கும். இன்னொருமுறை தமிழரின் உளவுரண்(morality) உடைந்திருக்கும். எனவேதான் தமிழினம் தமிழீழம் என்ற கோட்பாட்டைத்தாண்டி என்றும் கீழிறங்கக் கூடாது. நாங்கள் தொடர்ந்து உறுதியுடனும் நம்பிக்கையுடனும் போராடவேண்டும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply