பிரித்தானியாவின் சர்ரே பகுதியில் இணையம் ஊடாக வாங்கிய கொடிய மருந்தால் இளம் வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் துர் மரணங்களை விசாரணை செய்யும் அதிகாரி அமேசான் இணைய சேவைகள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் சர்ரே பகுதியில் அமைந்துள்ள தங்குமிடத்தில் 23 வயதான நேஹா ராஜு என்ற மாணவி சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் விசாரணையை முன்னெடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி பின்னணியை வெளிக்கொண்டுவந்தனர்.
அதாவது, தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் அதிகமாக பயன்படுத்தும் இணைய குழுக்களில், பகிரப்பட்ட தகவலின் அடிப்படையில், நேஹா ராஜு அந்த கொடிய மருந்தை வாங்கியதாக கண்டறியப்பட்டது.
அமேசான் இணைய சேவைகள் நிறுவனம் ஊடாக நேஹா ராஜு தொடர்புடைய மருந்தை ஒரு கனேடிய நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளார். பொதுவாக உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் அந்த மருந்தை பயன்படுத்தி வருவதுடன், தொடர்புடைய மருந்தானது சட்டத்திற்கு உட்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது உயிரைப் பறிக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் குறித்த கொடிய மருந்தை உட்கொண்டு 40 பேர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நேஹா ராஜுவும் தொடர்புடைய கொடிய மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றே விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் அமேசான் நிறுவனத்திற்கும், குறித்த கொடிய மருந்தை தயாரிக்கும் கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கும் பிரித்தானிய சுகாதாரத்துறை செயலர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சர்வ சாதாரணமாக பொதுமக்கள் இணைய நிறுவனங்கள் ஊடாக வாங்க முடியும் என்பதால், இதனால் பாதிப்புகளும் அதிகம் என்கிறார்கள். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும், மெத்தனமாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஜேர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலியில் குறித்த கொடிய மருந்துக்கு கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் நிலையில், ஏன் பிரித்தானியாவில் அவ்வாறான கட்டுப்பாடுகள் இல்லை என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.