ரொகிஞ்ஞா இன அழிப்புத் தீர்ப்பு: உலக நீதியின் வரலாற்றுத் திருப்புமுனை!

You are currently viewing ரொகிஞ்ஞா இன அழிப்புத் தீர்ப்பு: உலக நீதியின் வரலாற்றுத் திருப்புமுனை!

ரொகிஞ்ஞா இன அழிப்புத் தீர்ப்பு: உலக நீதியின் வரலாற்றுத் திருப்புமுனை! அரச அதிகாரத்தைச் சட்டத்தின் முன் நிறுத்திய சர்வதேச நீதியின் மகத்தான வெற்றி!

அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி

ஆய்வுக்கட்டுரை — 22 நவம்பர் 2026

2026 நவம்பர் 19ஆம் நாள் உலக நீதித்துறை வரலாற்றில் அழியாததொரு நாளாகப் பதிவாகியுள்ளது. நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றம் (ICJ), மியான்மார் அரசு ரொஹிஞ்ஞா மக்களுக்கு எதிராக இன அழிப்பைப் புரிந்துள்ளது என்பதை ஒன்பது நீதியரசர்களின் ஆதரவுடனும் ஆறு நீதியரசர்களின் எதிர்ப்புடனும் உறுதிசெய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது ஒரு சாதாரண மனித உரிமை மீறல் தொடர்பான தீர்ப்பல்ல. ஓர் இனக்குழுவை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக ஓர் அரசின் நேரடிப் பொறுப்பைச் சர்வதேச நீதிமன்றம் நிறுவியிருப்பது இதுவே முதல் முறையாகும். உலகின் மிக உயர்ந்த சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அரச அதிகாரம் எவ்வளவு வலிமையானதாக இருந்தாலும் அது சர்வதேசச் சட்டத்திற்கும் நீதிக்கும் அப்பாற்பட்டதல்ல என்ற அடிப்படைக் கோட்பாட்டை மீண்டும் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

பல தலைமுறைகளாகத் தமது அடையாளம், குடியுரிமை, வாழ்வுரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுக்காகப் போராடிவந்த ரொஹிஞ்ஞா மக்களின் வரலாற்றில் இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. நீண்டகாலமாக மறுக்கப்பட்ட நீதியை, சர்வதேச நீதிமன்றத்தின் வழியாக நிலைநாட்ட முடியும் என்பதற்கான வரலாற்றுச் சான்றாகவும் இது விளங்குகின்றது.

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ரொஹிஞ்ஞா முஸ்லிம் மக்கள், பல தசாப்தங்களாக இன அடிப்படையிலான பாகுபாடு, அடிப்படை உரிமைகள் மறுப்பு, குடியுரிமைப் பிரச்சினைகள், கட்டாய இடப்பெயர்வு, இராணுவ அடக்குமுறைகள் ஆகியவற்றை எதிர்கொண்டனர். குறிப்பாக 1982ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டமும் அதனுடன் தொடர்புடைய நிர்வாக நடைமுறைகளும் பெருமளவிலான ரொஹிஞ்ஞா மக்களை நாடற்ற நிலைக்குத் தள்ளின.

அவர்களின் நடமாட்டச் சுதந்திரம், கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப் பிறப்புப் பதிவு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகள் தனித்தனியான நிர்வாகக் கட்டுப்பாடுகளாக மட்டுமன்றி, ஒரு சமூகத்தைப் படிப்படியாக அரசியல், சமூக, பொருளாதார வாழ்க்கையிலிருந்து ஒதுக்கிவைத்த நீண்டகால இனப்பாகுபாட்டு நடைமுறைகளாக அமைந்திருந்தன.

2017ஆம் ஆண்டு ராக்கைன் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் இந்த ஒடுக்குமுறையின் மிகக் கொடூரமான வெளிப்பாடாக மாறின. ரொஹிஞ்ஞா கிராமங்கள் எரித்தழிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். உயிர் தப்பிய ஏழு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அண்டை நாடான பங்களாதேசிற்குத் தப்பிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஐக்கிய நாடுகள் உண்மை கண்டறியும் குழு, இந்த வன்முறைகளில் குறைந்தது பத்தாயிரம் ரொஹிஞ்ஞா மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டிருந்தது. அந்த மதிப்பீட்டுக்கு விசாரணை ஆவணங்களில் ஆதாரம் இருப்பதாகச் சர்வதேச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. திட்டமிட்ட தாக்குதல்கள், கூட்டுப் பாலியல் வன்முறைகள், குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள், குடியிருப்புகளை எரித்தழித்தல், தப்பியோடிய மக்களைத் தாக்குதல் ஆகியவை நீதிமன்றத்தின் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த வரலாற்றுத் தீர்ப்புக்குப் பின்னால் சர்வதேச சமூகத்தின் கூட்டு முயற்சியும், குறிப்பாக ஆபிரிக்காவின் சிறிய நாடான காம்பியாவின் உறுதியான சட்ட நடவடிக்கையும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.

ரொஹிஞ்ஞா மக்களுக்கு எதிரான வன்முறைகளால் நேரடியாகப் பாதிக்கப்படாத நாடாக இருந்தபோதிலும், காம்பியா 2019 நவம்பர் 11ஆம் நாள் மியான்மாருக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த வழக்கு, இன அழிப்பைத் தடுப்பதும் தண்டிப்பதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ அண்டை நாடுகளுக்கோ மட்டுமான பொறுப்பல்ல; அது இன அழிப்பு உடன்படிக்கையில் இணைந்துள்ள அனைத்து நாடுகளினதும் பொதுவான சட்டக் கடமை என்ற அடிப்படையில் உருவானது.

2020 ஜனவரி 23ஆம் நாள் ரொஹிஞ்ஞா மக்களைப் பாதுகாக்கவும், இன அழிப்புச் செயல்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்கவும், தொடர்புடைய சான்றுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படவும் சர்வதேச நீதிமன்றம் இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்தது.

2022 ஜூலை 22ஆம் நாள் மியான்மார் முன்வைத்த ஆரம்பகட்ட சட்ட ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டன. 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் பதினொரு நாடுகள் இன அழிப்பு உடன்படிக்கையின் சட்ட விளக்கங்கள் தொடர்பாக வழக்கில் தலையிட அனுமதிக்கப்பட்டன. 2026 ஜனவரி 12ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை வழக்கின் சாராம்சம் தொடர்பான இறுதி வாய்மொழி விசாரணைகள் நடைபெற்றன.

ஏழாண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட இந்தச் சட்டப் போராட்டத்தின் முடிவிலேயே 2026 நவம்பர் 19ஆம் நாள் வரலாற்றுத் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் மிக முக்கியமான சட்ட அம்சம், இன அழிப்புக்கான குறிப்பிட்ட நோக்கத்தை நீதிமன்றம் எவ்வாறு நிறுவியது என்பதாகும்.

1948ஆம் ஆண்டின் இன அழிப்பைத் தடுத்தலும் தண்டித்தலும் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின்படி, ஒரு தேசிய, இன, நிற அல்லது மதக்குழுவை முழுமையாகவோ அதன் ஒரு கணிசமான பகுதியையோ அழிக்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் தடைசெய்யப்பட்ட செயல்களில் ஈடுபடுவது இன அழிப்புக் குற்றமாகும்.

ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, அவர்களுக்குக் கடுமையான உடல் அல்லது உளப் பாதிப்புகளை ஏற்படுத்துவது, அந்தக் குழுவினுள் பிறப்புகளைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட செயல்கள் இன அழிப்புக் குற்றத்தின் சட்டக் கூறுகளாக அமையலாம்.

எனினும் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற காரணத்தால் மட்டும் சட்டரீதியாக இன அழிப்பு நிரூபிக்கப்பட்டுவிடாது. சம்பந்தப்பட்ட இனக்குழுவை அழிக்கும் குறிப்பிட்ட நோக்கம் இருந்தது என்பதையும் நம்பகமான சான்றுகளின் அடிப்படையில் நிறுவ வேண்டும்.

மியான்மார் அரசு, தமது இராணுவ நடவடிக்கைகள் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளே என வாதிட்டது. ஆனால் இராணுவ நடவடிக்கைகளின்போது பொதுமக்களுக்கும் ஆயுதக் குழு உறுப்பினர்களுக்கும் இடையில் வேறுபாடு காட்டப்படாதமை, பெண்களும் குழந்தைகளும் குறிவைக்கப்பட்டமை, கிராமங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டமை, தப்பியோடிய பொதுமக்கள் தாக்கப்பட்டமை ஆகியவற்றை நீதிமன்றம் ஒருங்கிணைத்து ஆராய்ந்தது.

இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தையும் ஒரு சாதாரண ஆயுதக் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கையாக விளக்க முடியாது என்று நீதிமன்றம் முடிவுசெய்தது.

நீண்டகால இனப்பாகுபாடு, ரொஹிஞ்ஞா மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு, தேர்ந்தெடுக்கப்பட்ட இனக்குழுவைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள், குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள், வாழிடங்களை அழித்த முறை ஆகிய அனைத்தும் இன அழிப்பு நோக்கத்தை நிறுவுவதற்கான முக்கியமான சான்றுகளாக மதிப்பிடப்பட்டன.

இதன் அடிப்படையில் ரொஹிஞ்ஞா மக்களின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கமே மியான்மாரின் நடவடிக்கைகளை விளக்கக்கூடிய ஒரே நியாயமான முடிவு எனப் பெரும்பான்மை நீதியரசர்கள் தீர்மானித்தனர்.

முக்கியமாக, ரொஹிஞ்ஞா மக்களைக் கொன்றமை, அவர்களுக்குக் கடுமையான உடல் மற்றும் உளப் பாதிப்புகளை ஏற்படுத்தியமை, அவர்களுக்குள் பிறப்புகளைத் தடுக்கும் நோக்கிலான நடவடிக்கைகளை மேற்கொண்டமை ஆகிய மூன்று வகையான இன அழிப்புச் செயல்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கண்டறிந்தது.

அதேவேளை, இனக்குழுவின் உடல் அழிவை ஏற்படுத்தும் வகையில் வாழ்க்கை நிலைமைகளை வேண்டுமென்றே திணித்ததாக முன்வைக்கப்பட்ட தனியான சட்டக் கூறு, தேவையான அளவுக்கு உறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த வேறுபாடு முக்கியமானது. ஏனெனில் சர்வதேச நீதிமன்றம் பொதுவான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அல்லாமல், ஒவ்வொரு குற்றக்கூறையும் தனித்தனியாகச் சான்றுகளுடன் ஆராய்ந்து தீர்மானித்துள்ளது என்பதை இது வெளிப்படுத்துகின்றது.

மியான்மார் இன அழிப்பைப் புரிந்துள்ளது என்ற பிரதான முடிவு ஒன்பதுக்கு ஆறு என்ற வாக்குகளால் உறுதிசெய்யப்பட்டது. அதன் பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து செயற்பட்ட தனிநபர்களால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புச் செயல்களைத் தடுக்கத் தவறியதற்கும் அதே பெரும்பான்மையால் மியான்மார் பொறுப்பாக்கப்பட்டது.

இன அழிப்பையும் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்ட பிற தண்டனைக்குரிய செயல்களையும் தண்டிக்கத் தவறியமை பதினொன்றுக்கு நான்கு என்ற வாக்குகளாலும், உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தேவையான சட்டங்களை இயற்றத் தவறியமை பதினான்குக்கு ஒன்று என்ற வாக்குகளாலும் உறுதிசெய்யப்பட்டன.

ஆனால் தனியார் நபர்களை இன அழிப்புக்குத் நேரடியாகவும் பகிரங்கமாகவும் தூண்டியதாக முன்வைக்கப்பட்ட தனியான குற்றச்சாட்டில், மியான்மார் உடன்படிக்கையை மீறியதாக நீதிமன்றம் கண்டறியவில்லை. மேலும், 2020ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவின்படி சான்றுகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையை மியான்மார் மீறியதாகவும் நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்தத் தீர்ப்பில் காம்பியாவினால் தெரிவுசெய்யப்பட்ட சிறப்பு நீதியரசராகத் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை பங்கேற்றிருந்தார். முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளரான அவர், மியான்மாரின் இன அழிப்புக்கான அரசுப் பொறுப்பை உறுதிசெய்த பெரும்பான்மை நீதியரசர்களுடன் இணைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மியான்மாருக்கு எதிரான இந்தத் தீர்ப்பின் மற்றுமொரு முக்கியமான அம்சம், குற்றத்தை உறுதிப்படுத்துவதுடன் நீதிமன்றம் தனது கடமையை நிறுத்திக்கொள்ளவில்லை என்பதாகும்.

இன அழிப்புடன் தொடர்புடையவர்களை முறையாக விசாரித்து, தேவையானபோது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்டித்தல், இன அழிப்பு உடன்படிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தும் சட்டங்களை இயற்றுதல், இத்தகைய குற்றங்கள் மீண்டும் இடம்பெறாதிருப்பதற்கான உறுதிப்பாடுகளை வழங்குதல் ஆகிய கடமைகளை நீதிமன்றம் மியான்மாருக்கு விதித்துள்ளது.

அத்துடன் இடம்பெயர்ந்த ரொஹிஞ்ஞா மக்கள் தமது வாழிடங்களுக்குப் பாதுகாப்பாகவும், தன்னிச்சையாகவும், கண்ணியமாகவும் திரும்புவதற்கான ஏற்பாடுகள், பிரிந்த குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுசீரமைப்பு மற்றும் இழப்பீடு ஆகியவற்றையும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இழப்பீட்டுத் தொகையும் அதனை வழங்கும் நடைமுறைகளும் இன்னும் இறுதியாக நிர்ணயிக்கப்படவில்லை. 2028 நவம்பர் 19ஆம் நாளுக்குள் மேற்கொள்ளப்பட்ட மீளமைப்பு நடவடிக்கைகள் மற்றும் இழப்பீடு தொடர்பான அறிக்கையை மியான்மார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் இழப்பீடு தொடர்பான அடுத்தகட்ட நடைமுறைகளை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

இத்தீர்ப்பு சட்டரீதியாக இறுதியானதும் இரு தரப்பினரையும் கட்டுப்படுத்துவதுமாகும். இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. எனினும் தீர்ப்பின் நடைமுறைப்படுத்தல் தானாக நிகழ்ந்துவிடாது. அதற்கான அரசியல் உறுதிப்பாடு, சர்வதேசக் கண்காணிப்பு, இராஜதந்திர அழுத்தங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை தொடர்ந்து அவசியமாகின்றன.

இந்தத் தீர்ப்பின் வரலாற்று முக்கியத்துவத்தை 2007ஆம் ஆண்டின் பொஸ்னியா–செர்பியா வழக்குடன் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள முடியும்.

1995ஆம் ஆண்டு ஸ்ரெப்ரெனிட்சாவில் நிகழ்ந்த படுகொலைகளை இன அழிப்பு எனச் சர்வதேச நீதிமன்றம் உறுதிசெய்திருந்தது. எனினும் அவற்றைச் செர்பியா அரசின் சொந்தச் செயல்களாக நேரடியாகப் பொறுப்பாக்கவில்லை. இன அழிப்பைத் தடுக்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் தவறியமைக்காகச் செர்பியாவைப் பொறுப்பாக்கியது.

ஆனால் மியான்மார் வழக்கில் அரசின் சொந்தப் பாதுகாப்புப் படைகளும் அரச அமைப்புகளும் இன அழிப்புச் செயல்களைப் புரிந்துள்ளதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இதுவே இந்தத் தீர்ப்பை உலக நீதித்துறை வரலாற்றில் தனித்துவமான இடத்திற்கு உயர்த்தியுள்ளது.

இங்கே காம்பியாவின் பங்களிப்பு தனித்துவமாகக் கவனிக்கப்பட வேண்டியது.

உலகின் பெரிய இராணுவ அல்லது பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக இல்லாத ஒரு சிறிய நாடு, தன்னுடன் நேரடித் தொடர்பில்லாத ஒரு மக்களின் நீதிக்காகச் சர்வதேச நீதிமன்றத்தை நாடி வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் இன அழிப்பு உடன்படிக்கையின் கீழுள்ள கடமைகள் தனிப்பட்ட நாடுகளின் நலன்களுக்கானவை மட்டுமல்ல; அவை சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களையும் பாதுகாக்கின்றன என்ற சட்டக் கோட்பாடு வலுவாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர்களது சொந்த அரசு மட்டுமே நீதியை நாட முடியும் என்ற கருத்தையும் இந்த வழக்கு தகர்த்துள்ளது. இன அழிப்பு உடன்படிக்கையில் உறுப்பினராகவுள்ள ஒரு நாடு, அதே உடன்படிக்கையில் உறுப்பினராகவுள்ள மற்றொரு அரசின் மீறல்களுக்கு எதிராக, உரிய சட்ட நிபந்தனைகளின் கீழ் சர்வதேச நீதிமன்றத்தை நாட முடியும் என்பதை காம்பியாவின் முயற்சி எடுத்துக்காட்டியுள்ளது.

அதேநேரத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கும் இடையிலான வேறுபாட்டையும் இந்த வழக்கு வெளிப்படுத்துகின்றது.

ICJ எனப்படும் சர்வதேச நீதிமன்றம் அரசுகளுக்கிடையிலான சட்டப் பிணக்குகளையும் அரசுகளின் சர்வதேச சட்டப் பொறுப்பையும் விசாரிக்கின்றது. ICC எனப்படும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இன அழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் போன்றவற்றுக்காகத் தனிநபர்களின் குற்றவியல் பொறுப்பை ஆராய்கின்றது.

மியான்மார் ICCயின் உறுப்பினர் நாடாக இல்லாதபோதிலும், ரொஹிஞ்ஞா மக்களைப் பங்களாதேசுக்குக் கட்டாயமாக வெளியேற்றியமை தொடர்பான குற்றச்சாட்டுகளில், சம்பந்தப்பட்ட குற்றத்தின் ஒரு பகுதி ICC உறுப்பினர் நாடான பங்களாதேசில் நிகழ்ந்ததை அடிப்படையாகக் கொண்டு சர்வதேசக் குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனவே அரசுகளின் பொறுப்பை நிறுவும் சட்ட நடவடிக்கைகளும் தனிநபர்களின் குற்றவியல் பொறுப்பை நிறுவும் நடவடிக்கைகளும் ஒன்றுக்கொன்று மாற்றானவை அல்ல. அவை சர்வதேச நீதியின் வெவ்வேறு பாதைகளாகும்.

இந்த வழக்கில் ஐக்கிய நாடுகளின் மியான்மாருக்கான சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் (IIMM) பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

சாட்சியங்கள், விசாரணை அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களை முறையாகச் சேகரித்து, சரிபார்த்து, பகுப்பாய்வு செய்தமை நீதிமன்றத்தின் சான்று மதிப்பீட்டில் முக்கியமான இடத்தைப் பெற்றது. சுயாதீனமாகச் சேகரிக்கப்பட்ட சாட்சியங்களுக்கும் அறிவியல்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட ஆதாரங்களுக்கும் சர்வதேச நீதியில் எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வாறான வரலாற்று வழக்குகளின் வெற்றி வெறும் அரசியல் அறிவிப்புகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. அவற்றின் பின்னால் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் ஆவணப்படுத்தல், சான்றுப் பாதுகாப்பு, சட்ட ஆய்வு, சாட்சியங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துதல், சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய அனைத்தும் இணைந்துள்ளன.

இந்தத் தீர்ப்பு ரொஹிஞ்ஞா மக்களின் வரலாற்றுத் துயரங்களுக்கு ஒரு முக்கியமான சட்ட அங்கீகாரமாக அமைந்தாலும், அவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து நெருக்கடிகளும் இதனால் உடனடியாக முடிவுக்கு வந்துவிடவில்லை.

பங்களாதேசின் அகதி முகாம்களில் வாழும் பெருமளவிலான மக்கள் இன்னும் தமது சொந்த வாழிடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். குடியுரிமை, வாழ்வாதாரம், கல்வி, பாதுகாப்பு, கண்ணியமான மீள்குடியேற்றம் ஆகிய கேள்விகளுக்கு நீடித்த தீர்வுகள் காணப்பட வேண்டியுள்ளன.

ராக்கைன் மாநிலத்தில் நிலவும் ஆயுத மோதல்களும் அரசியல் பாதுகாப்பின்மையும் ரொஹிஞ்ஞா மக்களின் எதிர்காலத்தைத் தொடர்ந்து பாதிக்கின்றன. எனவே நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதோடு, அவர்கள் மீண்டும் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகாதிருப்பதற்கான நிலையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் அவசியமாகின்றன.

இங்கே சர்வதேச சமூகத்திற்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் அறிக்கைகளுடன் கடமைகள் முடிந்துவிடுவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், கண்ணியமான மீள்குடியேற்றம், குற்றவாளிகளுக்கான பொறுப்புக்கூறல், இழப்பீடு, மீண்டும் இன அழிப்பு நிகழாமல் தடுக்கும் நடைமுறைகள் ஆகியவற்றைச் செயற்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளும் தேவைப்படுகின்றன.

இன அழிப்பைத் தடுத்தலும் தண்டித்தலும் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் உண்மையான நோக்கம், குற்றம் நிகழ்ந்த பின்னர் அதனை அங்கீகரிப்பது மட்டுமல்ல. அத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுப்பதும், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதும், பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீளநிறுவுவதுமாகும்.

2026 நவம்பர் 19ஆம் நாள் வழங்கப்பட்ட தீர்ப்பு இந்த அடிப்படை நோக்கத்தை உலகிற்கு மீண்டும் நினைவூட்டியுள்ளது.

மியான்மார் அரசு தனது நடவடிக்கைகளைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் என விளக்கியபோதிலும், நீதிமன்றம் அந்த விளக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கவில்லை. உண்மையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் தன்மை, தாக்குதல்களின் முறை, பாதிக்கப்பட்ட மக்களின் அடையாளம், அரச அமைப்புகளின் செயல்பாடுகள், சான்றுகள் வெளிப்படுத்திய குறிப்பிட்ட நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனது முடிவை நிறுவியுள்ளது.

ஓர் அரசு தனது நடவடிக்கைகளுக்கு வழங்கும் பெயரோ அரசியல் விளக்கமோ மட்டும் அதன் சர்வதேச சட்டப் பொறுப்பைத் தீர்மானிப்பதில்லை. சான்றுகளும் சட்டமும் அதன் உண்மையான தன்மையைத் தீர்மானிக்கின்றன என்ற அடிப்படையை இந்தத் தீர்ப்பு உலகிற்கு அழுத்தமாக எடுத்துரைக்கின்றது.

இதுவே மியான்மார் தீர்ப்பு உலக நீதித்துறைக்கு வழங்கியுள்ள மகத்தான சட்டப் பாடமாகும்.

பல ஆண்டுகளாகத் தமது துயரங்களை உலகிற்கு எடுத்துரைத்த ரொஹிஞ்ஞா மக்களுக்கு இந்தத் தீர்ப்பு வெறும் சட்ட ஆவணமல்ல. இழந்த உறவுகளின் நினைவுகளுக்கும், அழிக்கப்பட்ட வாழிடங்களுக்கும், தாயகத்தை விட்டுத் தப்பியோடிய குடும்பங்களுக்கும், நீதியை எதிர்பார்த்துக் காத்திருந்த தலைமுறைகளுக்கும் கிடைத்துள்ள வரலாற்று அங்கீகாரமாகும்.

ஆனால் அங்கீகாரம் மட்டும் முழுமையான நீதியாகிவிடாது. குற்றங்களுக்கான பொறுப்பை நிறுவுதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், அவர்களின் அடிப்படை உரிமைகளை மீளநிறுவுதல், மீண்டும் இத்தகைய கொடுமைகள் நிகழாத பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலமே நீடித்த நீதி சாத்தியமாகும்.

காம்பியாவின் ஏழாண்டுகாலச் சட்டப் போராட்டம் இன்னுமொரு உண்மையையும் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளது. நீதி தாமதிக்கப்படலாம்; அரசியல் தடைகள் அதன் பாதையைச் சிக்கலாக்கலாம்; வல்லமைமிக்க அரச அதிகாரங்கள் குற்றச்சாட்டுகளை மறுக்கலாம். ஆனால் நம்பகமான சான்றுகள், உறுதியான சட்ட அணுகுமுறை, சர்வதேச ஒத்துழைப்பு, விடாமுயற்சி ஆகியவை ஒன்றிணையும்போது நீதிக்கான புதிய வாயில்களைத் திறக்க முடியும்.

உலக வரலாற்றில் அரசுகளின் அதிகாரம் பலமுறை மக்களின் உரிமைகளுக்கு மேலானதாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தீர்ப்பு, மனித உரிமைகளையும் இனக்குழுக்களின் வாழ்வுரிமையையும் பாதுகாக்கும் சர்வதேசச் சட்டக் கடமைகளுக்கு அரச அதிகாரமும் கட்டுப்பட்டதே என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளது.

நீதி என்பது வலிமைமிக்கவர்களுக்கான தனியுரிமையல்ல. அது ஒடுக்கப்பட்டவர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமையாகும்.

அந்த உரிமையை நிலைநாட்டுவதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டாலும், சான்றுகளின் வலிமையும் சட்டத்தின் உறுதியும் நீதிக்கான விடாமுயற்சியும் வரலாற்றின் போக்கையே மாற்றக்கூடியவை என்பதை ரொஹிஞ்ஞா மக்களின் வழக்கு நிரூபித்துள்ளது.

2026 நவம்பர் 19ஆம் நாள் என்பது மியான்மார் அரசின் இன அழிப்புப் பொறுப்பு சர்வதேச நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்ட நாள் மட்டுமல்ல. அரச அதிகாரத்திற்கு எதிராக சர்வதேசச் சட்டத்தின் வலிமை நிலைநாட்டப்பட்ட வரலாற்று நாளாகவும் அமைந்துள்ளது.

காலம் கடந்தாலும் குற்றங்களுக்கான பொறுப்பு மறைந்துவிடாது. அதிகாரம் உயர்ந்தாலும் அது நீதிக்கு அப்பாற்பட்டதாகிவிடாது. உண்மையும் சான்றுகளும் சட்டமும் ஒன்றிணையும்போது மறுக்கப்பட்ட நீதியும் ஒருநாள் உலக அரங்கில் நிலைநாட்டப்படும்.

ரொஹிஞ்ஞா மக்களின் வரலாற்றுச் சட்ட வெற்றி உலகிற்குச் சொல்லும் அழியாத செய்தி இதுதான்!

அரச அதிகாரத்தைவிடச் சட்டம் உயர்ந்தது; அடக்குமுறையைவிட நீதி வலிமையானது; நீதி மறுக்கப்பட்ட மக்களின் குரலை வரலாற்றில் ஒருபோதும் நிரந்தரமாக அடக்கிவிட முடியாது! இதுவே வரலாறு சொல்லும் பாடமாகும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply