கனடா – ரொறன்ரோவில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் நேற்றுமுன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளார் என ரொறன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
58 வயதான கமலகண்ணன் அரசரட்ணம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஸ்காபுரோவில் Finch Avenue East மற்றும் Bridletowne Circle பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.04 மணியளவில் மோதல் சம்பவம் தொடர்பில் ரொரன்றோ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்த்துறையினர் சென்றுள்ளனர்.அங்கு ஆபத்தான நிலையில் இருந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்தச்சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என தெரிய வருகிறது.
அந்தப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் இரண்டு ஆண்களுக்கு இடையில் ஆரம்பித்த வாக்குவாதம் வன்முறையாக மாறி மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த கமலகண்ணன் உயிரிழந்தார்.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவரை ரொறன்ரோ காவல்த்துறையினர் தேடிவருகின்றனர்.
சந்தேக நபர் 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர் என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். கொலையாளி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையவர் தொடர்பான தகவல்களை காவல்த்துறையினர் வெளியிட்டுள்ளனர். நீல நிற ஜேர்ச்சி, சாம்ல் நிற காற்சட்டையும், கறுப்பு பாதணிகளை அவர் அணிந்திருந்தார் என காவல்த்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் காவல்த்துறையினரின் 416-808-7400 என்ற இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்குமாறு காவல்த்துறையினர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.