றுவாண்டா இனப்படுகொலையாளி பாரிஸில் இன்று அதிகாலை கைது!

You are currently viewing றுவாண்டா இனப்படுகொலையாளி பாரிஸில் இன்று அதிகாலை கைது!

றுவாண்டா இனப்படுகொலையுடன் தொடர்புடைய முக்கிய நபர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் இன்று பாரிஸில் அகப்பட்டிருக்கிறார்.

சுமார் 25 வருடங்களாகத் தப்பி ஓடிப் பல நாடுகளில் தலைமறைவாகத் திரிந்த வர்த்தகரான Félicien Kabuga (வயது 84) என்பவரே கைதாகியுள்ளார்.

றுவாண்டா இனப் படுகொலைகளுக்கு நிதி உதவி அளித்த முக்கியபுள்ளிகளில் இவரும் ஒருவர் என்று விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.

போலி அடையாள ஆவணங்களுடன் தலைமறைவாக வாழ்ந்த இவர் பாரிஸின் புறநகரான Asnières-Sur-Seine பகுதியில் வைத்து இன்று அதிகாலை பொலிஸ் அதிரடிப்படையினரால் பிடிக்கப்பட்டார் என்ற தகவலை நீதி அமைச்சு வட்டாரங்களை ஆதாரங்காட்டி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

றுவாண்டா இனப்படுகொலையாளி பாரிஸில் இன்று அதிகாலை கைது! 1

கைதான நபர் பாரிஸ் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் நெதர்லாந்தின் Hague நகரில் இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச குற்ற விசாரணைகளுக்காகத் தேடப்பட்ட இவரைக் கைது செய்யும் பிடி ஆணையை ‘இன்ரபொல்’ விடுத்திருந்தது. இவரைப்பற்றிய தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.

றுவாண்டா இனப்படுகொலையாளி பாரிஸில் இன்று அதிகாலை கைது! 2

கிழக்கு ஆபிரிக்க நாடான றுவாண்டாவில் 1994 இல் Hutu இனத் தீவிரவாதிகள் சிறுபான்மையின Tutis இனத்தவர்கள் மீதும் தங்கள் அரசியல் எதிர்ப்பாளர்கள் மீதும் நடத்திய மோசமான இனப்படுகொலையில் சுமார் எட்டு லட்சம் பேர் உயிரிழந்தனர் என மதிப்பிடப்படுகிறது.

Tutis சிறுபான்மையினரைப் படுகொலை புரிந்த Hutu இனத்தவர்களுக்கு நிதி சேகரித்து உதவினார் என்பது உட்பட மனிதகுலத்துக்கு எதிரான பல குற்றச்சாட்டுகள் Félicien Kabuga மீது சுமத்தப்பட்டுள்ளன.

இனப்படுகொலைக் குற்றங்களைப் புரிந்தவர்கள் என்றைக்காவது ஒருநாள்-அது 25 வருடங்களுக்குப் பிறகு என்றாலும் கூட- கணக்குச்சொல்லியே ஆகவேண்டும் என்பதை இவரது கைது உணர்த்துகின்றது என்று றுவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் பொறிமுறை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி Serge Brammertz தெரிவித்திருக்கிறார்.

16-05-2020 (குமாரதாஸன்)

பகிர்ந்துகொள்ள