லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு பேரணி நடத்தி வருகின்றனர். சனிக்கிழமை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கினர், இதையடுத்து இஸ்ரேலும் போர் பிரகடனத்தை அறிவித்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், லெபனான், சிரியா ஆகிய முக்கிய மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் மேற்கத்திய நாடுகளில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் சாலையில் இறங்கி ஹமாஸ் அமைப்பினருக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீன ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலுக்கு, ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கூடி பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆதரவு தந்ததுடன், இஸ்ரேல் மீதான தாக்குதலை கொண்டாடினர்.
அதைப்போல அமெரிக்காவின் நியூயார்க் நகர சதுக்கம் பகுதியில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூடி ஹமாஸ் ஆயுத நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள் கூடி முற்றுகை பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகளில் முற்றுகையாளர்கள் கையில் பாலஸ்தீனத்தின் தேசிய கொடியுடனும், பதாகைகளுடனும் வீதியில் நிற்பதை பார்க்க முடிகிறது.