1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர்.
பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.இத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்- டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர் தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து விடுதலை பெற்ற தமிழீழத்தில் தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.
-தமிழீழ விடுதலை போரட்டமுமும் தமிழீழத் தேசியத் தலைவரும் நூல்