வடக்கின் பூநகரியில் காற்றாலை மின்சாரத் திட்டத்தை நிர்மாணிக்க இந்தியாவின் அதானி ஃப்ரீ எனர்ஜி குழுமத்திற்கு நிலையான எரிசக்தி ஆணைக்குழு (SEA) வழங்கிய தற்காலிக ஒப்புதல் “சட்டவிரோதமானது” என்று இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
234 மெகாவாட் காற்றாலை மின்சாரத்திட்டத்தை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள, இந்த தற்காலிக அனுமதியானது, 2007 ஆம் ஆண்டின் 35 ஆம் ஆண்டு இலக்க கடல் சட்டத்தை மீறுவதாக, சபையின் பொது முகாமையாளர் ரொஹந்த அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 7ஆம் திகதி நிலையான எரிசக்தி ஆணைக்குழுவின் (SEA) தலைவர் ரஞ்சித் சேபால, அதானி கிரீன் எனர்ஜிக்கு பூர்வாங்க ஒப்புதலை வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னர், அரசியல் அதிகாரிகளின் செல்வாக்கு காரணமாக, இத்தகைய சட்டவிரோத ‘பூர்வாங்க அனுமதி’ வழங்குவதை நிராகரித்து, கடல்சார் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் சுலக் ஷன ஜயவர்தன, தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க இலங்கை நிலையான எரிசக்தி அதிகாரசபைச் சட்டத்தின்படி, அத்தகைய மரபுசாரா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு ‘தற்காலிக அங்கீகாரம்’ மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு திட்ட ஒப்புதல் குழு(PAC )அனுமதி வழங்க வேண்டும். எனினும் இந்த திட்டத்திற்கு திட்ட ஒப்புதல் குழுவால் தற்காலிக ஒப்புதல் வழங்கப்படவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
திட்ட ஒப்புதல் குழு தற்காலிக அனுமதியை வழங்க முன், நிலையான எரிசக்தி ஆணைக்குழு, பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
குறிப்பாக, இந்த திட்டம் தொடர்பான முறையான சாத்தியக்கூறு ஆய்வை முதலில் முடிக்க வேண்டும், ஆனால் நிலையான எரிசக்தி ஆணைக்குழு, அதைச் செய்யவில்லை என்றும் உயரதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.