வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 486 பேரின் மாதிரிகள் நேற்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாவட்ட மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட 15 பேருக்கும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை
யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதிப்பினால் வடமராட்சி உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய முதியவர் உயிரிழந்துள்ளார். இவர் முதியவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பயனளிக்காது இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பும் காரணம் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதியவரின் சடலம் இன்று யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட் -19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.