இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவதாக பிரித்தானியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் எட்டாம் திகதி சிவராத்திரி நாளன்று வவுனியா வெடுக்குநாரி ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் போது எட்டுப் பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) பாராளுமன்ற உறுப்பினர் Patrick Grady பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் இவ்வாறு கூறியுள்ளார்.
“வவுனியாவில் உள்ள வெடுக்குநாரி ஆதி சிவன் ஆலயம் உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு நிலப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருவது தொடர்பில் நாங்கள் கவலையடைந்துள்ளோம்.
கைது செய்யப்பட்ட எட்டு இந்து வழிபாட்டாளர்களின் விடுதலையை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இந்த சம்பவம் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது பிரித்தானியா அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து மனித உரிமைகளை வலுப்படுத்துவதாக ட்ரெவெலியன் சுட்டிக்காட்டியுள்ளார்.