யாழ்.வடமராட்சி, மந்திகை பகுதியில் மயக்க மருந்து கொடுத்து ஒருவர் மயங்கிய பின்னர் அவரின் மோதிரத்தை களவாடி சென்ற சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாடகை முச்சக்கரவண்டி ஒன்றில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வந்ததும் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு கூறி மருத்துவமனைக்குள் மருந்து எடுப்பது போன்று பாசாங்கு செய்து அங்கிருந்து மூன்று மென்பான போத்தல்களை கொண்டுவந்து குறித்த முச்சக்கர வண்டி சாரதியை மென்பானத்தை அருந்துமாறு கொடுத்துள்ள நிலையில், அவர் அதனை பருகிய சில நிமிடங்களில் பருத்தித்துறை செல்வதற்காக முச்சக்கர வண்டியை செலுத்துமாறு கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர் பருத்தித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த போது மந்திகை,சிலையடி பகுதியில் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு கூறி வாகனத்தில் வந்தவர்கள் இறங்கி சென்றுள்ளனர்.
இந்நிலையில்,முச்சக்கர வண்டியின் உரிமையாளர் வீதியோரத்தில் வாகனத்தை நிறுத்தி தூங்கிக்கொண்டிருப்பதை அவதானித்த பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறையினரும், இராணுவத்தினரும் முச்சக்கர வண்டி சாரதி அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மயக்க மருந்து கொடுத்து அவர் மயங்கிய பின்னர் அவரின் மோதிரத்தை களவாடி சென்றமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு கடமைக்காக இருந்த வாடகை முச்சக்கரவண்டி நண்பர்கள் அவரை உடனடியாக அழைத்து சென்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளதுடன்,அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை, நெல்லியடி சிறீலங்கா காவற்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.