வரலாறாய் வாழும் வணங்காமண்!

You are currently viewing வரலாறாய் வாழும் வணங்காமண்!

பத்து ஆண்டுகள் கடந்தும்
கொத்துக்கொத்தாக வீழ்தவர்
கொடிய நினைவுகள்
நெஞ்சுக்கூட்டில்
பெரும் சுவாலையாய்
பற்றி எரிகிறது!

அதிகாரவெறியில்
அறநெறி இறந்து
மனிதம் காக்கும்
மகான்களெல்லாம்
புனிதம் இழந்து புத்தனின்
போதனையில்
ஆடையிழந்து
அம்மணமாய் அகல..
நாட்டையிழந்து
வீட்டையிழந்து!

ஆடிப்பாடிய அழகையிழந்து
கூடியிருந்தவரையிழந்து
வெறும் கூடுகளாய்
வெளியில் வந்தோம்!

ஒன்றொன்றாய்
ஒடியும் கிளைகளாய்
தொப்புள்க் கொடிகள்
சதைப் பிண்டங்களாய்
சிதறித் துடிக்கும்
ஒவ்வொரு கணங்களும்
குளறிக் குளறி அழுதோம்!

ஆனாலும்

மலையென எழுந்த
கொலைவெறியின் உச்சம்
அடங்காமலே அனலிடை
வீழ்ந்தோம்!

பொஸ்பரசுக் குண்டுகளினால்
பொசுங்கும் ஒவ்வொரு பொழுதும்
தமிழனின் தாகம் அடங்கவில்லை!


அடங்காத்தமிழனாய்
திமிறியெழும் கணங்களில்
கொத்தணிக் குண்டுகள்
வல்லரசுகளின் வாயைப்பிளந்து
எம் தலைகளை தகர்த்தது!

நெஞ்சுரத்தோடு நேருக்கு நேர்
மோதியபோதும்
புறம்தள்ளிய துரோகங்களின்
பிடியில்
அறங்கொண்டவர் யாகம்
அடங்கிப்போனது!

ஆனாலும்
விடம்கொண்டவர் வீரம்
செறிந்த வேள்வியில்
ஆயிரம் ஆயிரம் அதிகார
மூச்சு நசுங்கிப்போனது!

தடம் விலகாத தானைத்
தலைவன் பிள்ளைகளின்
கொண்ட கொள்கை
மண்டியிடாது நிமிர்ந்தது!

பெரும் தளபதிகளின்
தணியாத தாகத்தின்
கூர்முனைகள் ஓர்ரணியில்
நேருக்கு நேர் நின்றது
ஆனந்தபுரம்!


அருந்தலைவனை மீட்பதற்காய்
பெரும் தளபதிகள்
உயிர் வீசிய வீரத்தளம்!
தானைத்தலைவனின்
சேனைகளை வழிநடத்திய
கேணல்களின் வித்துடல்கள்
கோழைகளின் தாக்குதலில்
எரிகுண்டுகளால் எரிந்த
இடம்!

தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின்
ஆர்பரிப்புக்கு மத்தியிலும்
நேருக்கு நேர் நின்று
விடுதலைக்காய் நிமிர்ந்த தடம்
ஆனந்த புரம்!

அசுர பலமானாலும்
அடங்கா மறவரின்

விடமுண்ட வீரநெறியில்
வணங்கா மண்ணாய்
வரலாறு படைத்தது
தாய்மண்!!

தூயவன்

பகிர்ந்துகொள்ள