முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியாக இடம்பெற்று வரும் காடழிப்பு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியும் காட்டினை பாதுகாக்கும் அதிகாரிகள் கடழிப்பினை தடுக்கமுடியாத நிலை தொடர்ந்துவருகின்றது.
பெறுமதியான நீண்டகால மரங்கள் அழிக்கப்பட்டு குற்றிகளாக சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வரும் நிலையில் மாங்குளம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காடுகளில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டு மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக மாங்குளம் பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து
முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் அத்தியட்சகர் அனுருத்தபண்டார கக்மண தலைமையில் மாங்குளம் உதவிபொலீஸ் அத்தியட்சகர் துசிடதொக்கொடவத்த தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது பத்து இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான 60 மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ள.
பாலைப்பாணி,இரணைமடுப்பகுதிகளில் சுமார் 50 வரையான பாலை,முதிரை மரங்கள் தறிக்கப்பட்டு குற்றிகளாக்கப்பட்ட நிலையில் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
மாங்குளம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான 29 முதிரை மரக்குற்றிகள் டிப்பர் வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்ட வேளை மாங்குளம் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
குற்றிகளின் கணக்கின் படி காடுகளில் இருந்த நீண்டகால பெறுமதியான 25 வரையான முதிரை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இரணைமடு குளக்கரை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரம் அறுக்கப்படுவதாக மாங்குளம் பொலீஸ் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து குறித்த பகுதியில் சென்றபோது காட்டிற்குள் அறுத்து வீழ்த்தி ஏற்றுவதற்கு தயாரான நிலையில் உள்ள 31 பாலை மரக்குற்றிகளையும் பொலீசார் மீட்டுள்ளார்கள் ஏற்கனவே குறித்த பகுதியில் அதிகளவான பாலை மரங்கள் அழிக்கப்பட்டு குற்றிகளாக ஏற்றப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வாறு சுமார் 30 வரையான பெறுமதியான பாலை மரங்கள் காடுகளில் இருந்து அழிக்கப்பட்டுள்ளன.குறித்த பகுதியில் பொலீசார் சென்றவேளை சட்டவிரோ மரக்கடத்தல்காரர்கள் தப்பி சென்றுள்ளார்கள்.
பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் ஏற்றப்பட்ட நிலையில் மீதியாக இருந்த நான்கு இலட்சம் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் பொலீசாரால் மீட்கப்பட்டு உழவு இயந்திரங்கள் ஊடாக மாங்குளம் பொலீஸ் நிலையம் கொண்டுவரப்பட்டுள்ளது.
முதிரை மரக்கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட யாழ்பாணம் சாவகச்சேரியினை சேர்ந்த சந்தேக நபரினை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலீசார் தெரிவித்துள்ளார்கள்