வன்னியில் வாழும் இந்துக்களால் வழிபடப்பட்ட பாறையை இடித்தழிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாறையில் (சிறிய மலை) வெளிநபர் ஒருவருக்குக் கருங்கல் அகழ்விற்குப் பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாறையில் முன்னெடுக்கப்படவுள்ள கருங்கல் அகழ்வை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள கிராம மக்கள், இந்த மலை பல ஆண்டுகளாக மத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறியுள்ளனர்.
அந்தப் பாறையின் உச்சியில் அப்பகுதி மக்கள் ஆதிகாலம் முதலே பிள்ளையாரை வழிபட்டு வருவதாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைக்குப் பின்னர் கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பாறையின் உச்சியில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாறை ஒரு வழிபாட்டுத்தலம் என்பதை அறிந்த பிரதேச செயலாளர், தொல்பொருள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அதிகார சபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து பிரதேச வாசிகளுக்கு அறிவிப்பதாக உறுதியளித்ததாகப் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.