உயிரை மாய்த்துக்கொள்ள விரும்புபவர்களுக்கான தானியங்கி இயந்திரமொன்றுக்கான அனுமதியை சுவிட்சலாந்து அரசு வழங்கியுள்ளதை அடுத்து, உலகெங்கிலுமிருந்து, குறிப்பாக வைத்தியர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
தீராத / தீர்க்கமுடியாத கொடும் நோய்களால் அவதிப்பட்டுவரும் நோயாளிகள், நோயின் கொடுமையோடு வாழ்வது சிரமமாக உணரும்போது, தங்களை கருணைக்கொலை செய்துவிடும்படி வைத்தியர்களை வேண்டிக்கொள்வது வழமையாக இருந்தாலும், அநேகமான நாடுகளில் கருணைக்கொலைக்கான அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தற்கொலை இயந்திரம் / Sacro Pod” என அழைக்கப்படும் குறித்த இயந்திரத்தை வடிவமைத்துள்ள நிறுவனம், 2022 ஆண்டிலிருந்து இவ்வியந்திரத்தை பாவனைக்கு கொண்டுவரலாமென அறிவித்துள்ள நிலையிலும், முதலாவதாக சுவிட்சலாந்து அரசு அதற்கான அனுமதியை வழங்கியுள்ள நிலையிலும், இவ்வியந்திரத்தை ஏற்றுக்கொள்ளாத வைத்தியர்கள், கருணைக்கொலை என்ற வரையறையையும் தாண்டி, ஏனைய காரணங்களுக்காக தமதுயிர்களை மாய்த்துக்கொள்ள முனைபவர்களுக்கும் இவ்வியந்திரம் தற்கொலைக்கான தூண்டுதலாக இருக்கப்போகிறது என எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
உயிரை மாய்த்துக்கொள்பவர், மூடிய இவ்வியந்திரத்துக்குள் இருந்தபடி தானே அதனை இயக்கும் வகையிலும், அதேவேளை, உடலியக்கம் இல்லாதவர்கள், தங்கள் கண்ணசைவினாலும் இயக்கக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வியந்திரம், அது இயக்கப்படும்போது, படிப்படியாக நைதரசன் வாயுவை உள்ளே நிரப்பும் என்றும், நைதரசன் வாயு, உயிர்வாழ்வதற்கு தேவையான ஒக்சிசன் வாயுவை குறைத்து இல்லாமல் ஆக்கிவிடுவதால், ஒக்சிசன் இல்லாமல், இதயம் இயற்கை முறையிலேயே செயலற்று விடும் எனவும் தெரிவிக்கப்பட்டு அதேவேளை, ஒக்சிசன் போதாமையால் இதயம் தனது தொழிற்பாட்டை நிறுத்துவதால், உள்ளே இருப்பவர் வலிகளேதுமில்லாமல் அமைதியான முறையில் மரணத்தை தழுவிக்கொள்வாரெனவும், இச்செயற்பாடுகள் யாவும், 30 வினாடிகளுக்குள் நடைபெற்று முடிந்து விடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.