வலி. மேற்கு கரையோரப் பகுதிகளை வனவளத் திணைக்களம் சுவீகரிக்க இடமளியோம்! – மக்கள் எதிர்ப்பு.

You are currently viewing வலி. மேற்கு கரையோரப் பகுதிகளை வனவளத் திணைக்களம் சுவீகரிக்க இடமளியோம்! – மக்கள் எதிர்ப்பு.

வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கடற்கரையோரப் பகுதியை வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் சுவீகரிப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என வலி.மேற்கு பிரதேச மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

கடற்கரையோரப் பகுதியை குறிப்பிட்ட திணைக்களத்திற்கு கையளித்தால் எதிர்காலத்தில் பொதுமக்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் இதனால் மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதவது வலி.மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அராலி மேற்கு ஜே-160, அராலி மத்தி ஜே-161, அராலி தெற்கு ஜே-162, அராலி கிழக்கு ஜே-163, பொன்னாலை ஜே-170, மூளாய் ஜே-171 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள கரையோரப் பகுதி மற்றும் பொன்னாலை கற்பிரதேசத்தில் உள்ள துருத்திப்பிட்டி போன்ற இடங்கள் உள்ளடங்கலாக 354 ஏக்கர் பிரதேசத்தை தாம் சுவீகரிக்கப் போவதாக வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்களால் யாழ்.அரச அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் செவ்வாய்க்கிழமை கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திணைக்களம், நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபை, பிரதேச சபை போன்ற பல தொடர்புடைய திணைக்கள உத்தியோகத்தர்களும் மேற்படி பிரதேசங்களைச் சேர்ந்த சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் மேற்படி சுவீகரிப்புத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். மேற்படி கடலை நம்பியே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றனர். மற்றும் கால்நடைகளின் மேய்ச்சல் தரவை, மாட்டு வண்டிச் சவாரித்திடல், மயானங்கள் போன்ற பலவும் இருக்கின்றன.

குறிப்பிட்ட இடத்தை வனவளங்கள் பாதுகாப்புத் திணைக்களத்திற் வழங்கினால் இங்கு அன்றாடம் இடம்பெறும் தொழில்சார் நடவடிக்கைகள் பாதிக்கப்படும். கடற்கரையோர அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு வனவளங்கள் பாதுகாப்பு திணைக்களத்திடம் அனுமதி பெறவேண்டி இருக்கும்.

இது மக்களை பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கும். எனவே, இந்த இடங்களை அவர்கள் சுவீகரிப்பதற்கு தாம் அனுமதிக்க மாட்டார்கள் என அனைவரும் ஏகமனதாக தீர்மானம் எடுத்தனர். இந்த முடிவை தாம் யாழ்.அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்துவார் என பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments