வவுனியாவில் மேலும் 94 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 94 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மகாறம்பைக்குளம், தவசிகுளம், புதிய சாலம்பைக்குளம், மறவன்குளம் ஆகிய பகுதிகளிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்று வந்த தோணிக்கல் சிவன்கோயில் வீதிப் பகுதியைச் சேர்ந்த வந்த ஆண் ஒருவரும், கோவிட் தொற்று காரணமாக மதவுவைத்தகுளம் கோவிட் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த சிப்பிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதுடன், பட்டானிச்சூர் பகுதியில் மரணமடைந்த ஆண் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூவரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை
யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் 4 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும் சண்டிலிப்பாயைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பருத்தித்துறை மருத்துவமனையில் இருந்து 62 வயதுடைய ஒருவரினதும், யாழ் போதனா மருத்துவமனையில் 65 வயதுடைய ஒருவரினதும் உடல் மாதிரிகளிலும் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது.