மாவீரர் நாளினை முன்னிட்டு, வவுனியா மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் இத்தாலி வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் வவுனியா வடக்கு,புளியங்குளம்,தரனிக்குளம்,ஈச்சங்குளம்,சிதம்பரபுரம்,கோவிற்குளம் பிரதேச மாவீரர் பெற்றோர்கள் 500 க்கு மேற்பட்டோர் பங்கேற்புடன் மாநகரசபை மண்டபத்தில் 24/11/2025 இன்று காலை 9:00மணியளவில் இடம்பெற்ரது.
மாவீரர்களின் பெற்றோர் மண்டபத்திற்கு வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டனர்.முதல் நிகழ்வாக பொதுச்சுடரேற்றல் ஏற்றிவைக்கப்பட்டது. பொதுபடத்திற்கான மலர் வணக்கத்தினை மாவீரர்களின் தாயார் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து பெற்றோர்கள் ஈகைச்சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. அதன் பின் அகவணக்கம் செலுத்தப்பட்டது. பின் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் மாவீரர்களின் நினைவு சுமந்த உரைகள் கலைநிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டது. அத்தோடு பிரதேச மக்கள் ஒன்றுதிரண்டு உணவு பரிமாறி சிறப்பித்தனர்.அனைவருடனும் கலந்துரையாடி இறுதியாக மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. உணர்வு பூர்வமான நிகழ்வு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,மதத்தலைவர்கள்,முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவீரர்களின் உறவினர்கள், மக்களென பலர் உணர்வோடு கலந்துகொண்டிருந்தனர்.











