மட்டக்களப்பு -வாகரையில் பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கு என வீட்டைவிட்டு வியாழக்கிழமை சென்று காணாமல் போன 13 வயதுடைய 4 சிறுமிகளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி பிரதேசத்திலுள் வீடு ஒன்றில் வெள்ளிக்கிழமை மீட்டதுடன் 17 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்துள்ளதாக வாகரை சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சிறுமிகள் பெற்றோரிடம் தலா 300 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து பாடசாலை சீருடையுடன் வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமிகள் அதனை கழற்றி வேறு ஆடைகளை அணிந்து கொண்டு அங்கிருந்து பஸ் வண்டியில் ஏறி பாசிக்குடா சென்று கடலில் நீராடிய நிலையில் அங்கு நீராடிய சுங்காங்கேணியைச் சேர்ந்த 17 ,16 வயது சிறுவர்களுடன் இரு சிறுமிகளுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இதனையடுத்து இரவாகியதால் சிறுமிகள் வீடு செல்ல பஸ் வண்டி இல்லாத காரணத்தால் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டு காலையில் போகுமாறு காதலன்கள் சிறுமிகளை கோரியதையடுத்து 4 சிறுமிகளும் காதலன் ஒருவரின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களையும் வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறுமிகளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.