ஒரு மனிதன், வாராவாரம் சராசரியாக 2000 வரையிலான “நெகிழி” (Plastic) துணிக்கைகளை உட்க்கொள்வதாக தரவுகள் சொல்கின்றன.
கடலில் சேரும் நெகிழி கழிவுப்பொருட்களை உட்கொள்வதால், வருடாந்தம் பல மில்லியன் கடல் பறவைகளும், திமிங்கிலங்களும் ஏனைய கடல்வாழ் உயிரினங்களும் இறந்து போகின்றன.
ஒரு மனிதனின் வயிற்றில், ஒரு வருடத்திற்கு அண்ணளவாக 500 கிராம் வரையிலான நெகிழி கழிவுகள் சேருகின்றன. உணவுகள் மூலமாகவும், மென்பானங்கள் உள்ளிட்ட நீராகாரங்கள் மூலமாகவும் நுண்ணிய நெகிழித்துகள்களை மனிதர்கள் நாளாந்தம் உட்கொள்கிறார்கள். இவ்வாறு மனிதர்களால் உட்கொள்ளப்படும் நுண்ணிய நெகிழித்துகள்கள் மனிதர்களை எவ்வாறு பாரதூரமாக பாதிக்கிறது என்பது சரிவர தெளிவு படுத்தப்படவில்லை என்றாலும், இத்துகள்கள் மனித ஆரோக்கியத்துக்கு ஏற்புடையவை அல்ல.
நெகிழியின் வரவும், பாவனையும் அபாரமானது. உயிர்காக்கும் வைத்தியத்துறை தொடக்கம், நாளாந்த வீட்டுப்பாவனை பொருட்கள், கட்டட மூலப்பொருட்கள், கப்பல் / விமானம்/ மகிழூந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சாதனங்கள் என நாளாந்தம் மனிதன் பாவனையில் வைத்திருக்கும் அத்தனை பொருட்களிலும் நெகிழி இணைந்தே இருக்கிறது.
இவ்வாறு, அனைத்து விடயங்களிலும் இன்றியமையாத மூலமாக இருக்கும் நெகிழியானது, உயிரினங்களுக்கும், இயற்கைக்கும் தீங்கை விளைவிக்கவும் கூடியது என்பதால், நெகிழியை உள்ளடக்கிய கழிவுப்பொருட்கள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படவோ அல்லது பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படவோ வேண்டியது அவசியமாகிறது.
எனினும், உற்பத்தி செய்யப்படும் நெகிழிகளில் சுமார் 9 சதவீதமான கழிவுகள் மட்டுமே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதோடு, சுமார் 12 சதவீதமான கழிவுகளே எரியூட்டப்பட்டு அழிக்கப்படுகின்றன என்பதோடு, மிகுதி அனைத்தும் கடலில் கொட்டப்படுவதும், சுற்றுச்சூழலில் கழிவுகளாக கொட்டப்படுவதுமான அவலநிலை தொடர்கிறது. இன்றைய சூழ்நிலையில், உலகத்தின் சுற்றுச்சூழல் மாசடைவது தொடர்பான பிரச்சனையில், கடலில் கொட்டப்படும் நெகிழிக்கழிவுகளே பாரிய பிரச்சனையாக இருக்கிறது.
கடலில் சேரும் நெகிழி கழிவுப்பொருட்களை உட்கொள்வதால், வருடாந்தம் பல மில்லியன் கடல் பறவைகளும், திமிங்கிலங்களும் ஏனைய கடல்வாழ் உயிரினங்களும் இறந்து போகின்றன.
நெகிழியிலான பாவனைப்பொருட்களின் தேவைகள் நாளாந்தம் அதிகரித்து செல்வதால், நெகிழியின் உற்பத்தியும் அதிகரித்தே செல்கிறது. தற்போது வருடாந்தம் 350 மில்லியன் தொன் நெகிழி உலகளாவிய ரீதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. 1950 ஆம் ஆண்டுப்பகுதியில் உற்பத்தியான நெகிழியின் அளவைவிட இது சுமார் 250 மடங்கு அதிகமானதாகும். நெகிழியின் தேவை வருடாவருடம் எவ்வளவு அதிகரிக்கிறதோ, அவ்வளவுக்கு நெகிழிக்கழிவும் அதிகரிக்கிறது.
நெகிழிக்கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் வசதிகளைக்கொண்ட மேலைத்தேச நாடுகள், நெகிழிக்கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதால், இந்நாடுகளில் நெகிழிக்கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறைவாக இருந்தாலும், இவ்வாறான வசதிகளில் பின்தங்கியிருக்கும் நாடுகளில், நெகிழிக்கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கான சரியான பொறிமுறைகள் இல்லாததாலும், நெகிழிக்கழிவுகள் தொடர்பில் மக்களுக்கு இருக்கும் விழிப்புணர்வின்மை காரணமாகவும் நெகிழிக்கழிவுகள் பொது இடங்களில் வீசப்படுவதும், வீசப்படும் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதும், நீர்நிலைகளினூடாக இக்கழிவுகள் கடலில் சேரும் அவலமும் தொடர்ந்து வருகிறது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து நெகிழிக்கழிவுகளை இறக்குமதி செய்து, அவற்றை மீள்சுழற்சிக்குள்ளாக்கி, புதிய நெகிழி உற்பத்திகளை உருவாக்குவதை இலாபகரமான தொழில்முறையாக கொண்டிருக்கும் ஆசியநாடுகளின் நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் கழிவுகளில் பெரும்பாலானவை, பயணத்தின்போதே கடலில் கலந்துவிடும் அவலமும் நடக்கிறது.
நெகிழியானது, பல்லாண்டு காலம் உறுதியாக இருக்கும்படி தயாரிக்கப்படுவதால், இயற்கை சூழலில் வீசப்படும் நெகிழிக்கழிவுகள் மக்கிப்போய் மண்ணோடு கலப்பதற்கு பல நூறு வருடங்கள் வரை ஆகும்.
கடலில் வீசப்படும் நெகிழியிலானாலான ஒரு குடுவை (Plastic Bottle), உராய்வுகள் மூலமாகவும், சூரியனின் ஊதாக்கதிர்களின் தாக்கத்தாலும் காலப்போக்கில் சிறுசிறு துணிக்கைகளாக சிதறிப்போவதாகவும், அச்சிறு துணிக்கைகள், கடல்வாழ் நுண்ணுயிரிகளால் “கார்பன்” ஆகவும், நீராகவும் மாற்றப்படுவதாகவும், ஆனால், இந்த செயற்பாடு முழுமையடைவதற்கு சுமார் 450 வருடங்கள் ஆகுமெனவும் ஆய்வுகள் சொல்கின்றன.
கடலில் கொட்டப்படும் நெகிழிக்கழிவுகள், பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்களுக்கு பேராபத்தாக உள்ளன. தற்போது அதிகளவில் அசாதாரணமாக உயிரிழந்துவரும் கடற்பறவைகளை ஆய்வு செய்ததில், அவற்றின் வயிறுகளில் அதிகளவில் நுண்ணிய நெகிழிப்பொருட்கள் இருப்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நுண்ணிய நெகிழிக்கழிவுகளை உட்கொள்ளும் பறவைகளும், உயிரினங்களும் தற்காலிக பசியடக்கத்தை பெறுவதோடு, மலச்சிக்கலையும் எதிர்கொள்கின்றன. மனிதர்களதும், ஏனைய விலங்குகளினதும் உடல்களுக்குள் உள்வாங்கப்படும் நுண்ணிய நெகிழிக்கழிவுகள், இரத்தத்திலும், நரம்புகளிலும் தங்கிவிடும் ஆபத்தும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
தற்போதைய கணக்கெடுப்புக்களின்படி, அண்ணளவாக 300 மில்லியன் தொன் வரையிலான நெகிழிக்கழிவுகள் கடலில் சேர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடலில் மிதக்கும் இந்நெகிழிக்கழிவுகள், கடலில் அவ்வப்போது ஏற்படும் சூறைக்காற்றின் காரணமாக, ஒரே இடத்திற்கு ஒதுக்கப்பட்டு, கழிவுகள் நிறைந்த, சேரிகளை ஒத்த செயற்கையான இடங்களையும் உருவாக்கிவிடுகின்றன.
கடலில் கொட்டப்படும் நெகிழிக்கழிவுகளின் சுமார் 15 சதவீதமானவை, கடற்கரைகளில் ஒதுங்கி அங்கேயே தங்கிவிடுவதுடன், 70 சதவீதமான கழிவுகள், கடலில் நீரில் அடித்து செல்லப்பட்டு, உலகம் முழுவதும் கடல்வழியாக பரவிச்செல்கின்றன. கடலின் ஆழப்பகுதிக்கு இழுத்து செல்லப்படும் நெகிழிக்கழிவுகள், ஆழ்கடலில் போதியளவு ஓட்சிசனோ அல்லது சூரிய ஒளியோ கிடைக்காததால் அவை மக்கிப்போவதற்கு மேலும் அதிக காலத்தை எடுத்துக்கொள்கின்றன.
பெரும்பாலும் எண்ணையை மூலப்பொருளாக கொண்டு நெகிழிகள் தயாரிக்கப்பட்டாலும், சிலவகையான நெகிழிகள் தாவரங்களிலிருந்து பெறப்படும் “செல்லுலோசு” என்ற பதார்த்தத்தை மூலப்பொருளாகவும் கொண்டு தயார் செய்யப்படுகின்றன.
எப்படியாயினும், இந்த மூலப்பொருட்களை வைத்து நெகிழிகளை உருவாக்கும்போதும், அவற்றை எரியூட்டி அழிக்கும்போதும் அபரிமிதமான கரியமிலவாயு (CO2) வெளிவேறுவதால், பூமியின் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
கடலில் மிதந்துவரும் பெருவாரியான நெகிழிக்கழிவுகளை அகற்றுவதற்கு பல்வேறு உலகநாடுகள் இணைந்து பாரிய செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கியமான ஓர் அம்சமாக, கடந்தவருடத்தில் சர்வதேச ஒப்பந்தமொன்று உலக நாடுகளிடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் “டொனல்ட் டிரம்ப்” அவர்களின் பலத்த எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் கைச்சாத்திடப்பட்ட இவ்வொப்பந்தத்தின் மூலமாக, நெகிழிக்கழிவுகளின் வர்த்தகத்தில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நெகிழிக்கழிவுகளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் வர்த்தகம் பெருமளவில் பொருளாதாரம் புரளும் வர்த்தகமாக இருப்பதாலும், வருடாந்தம் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலாபமாக பெற்றுத்தரும் வர்த்தகமாகவும் இருப்பதாலும், இவ்வர்த்தகம் பெரும்பாலும் கறுப்புச்சந்தையை மையப்படுத்தியே நடைபெறுகிறது. அதனால், இவ்வருட இறுதியிலிருந்து, முறையான அனுமதிப்பத்திரம் இல்லாமல் நெகிழிக்கழிவுகளை ஏற்றுமதி செய்யவோ அல்லது இறக்குமதி செய்யவோ குறித்த சர்வதேச ஒப்பந்தம் தடை செய்கிறது.
நெகிழிக்கழிவுகளின் பல்லாண்டுகாலம் நிலைத்து நிற்கக்கூடிய ஆபத்தை உணர்ந்து கொண்டதாலேயே, பல நாடுகளும் இப்போது கழிவுகளை தரம்பிரிக்கும் முறைமையை இறுக்கமாக கடைப்பிடிக்கின்றன. வசதிபடைத்த நாடுகளில் சாதாரண வீட்டுக்கழிவுகளையும் தரம்பிரித்து அகற்றும் நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
நெகிழிக்கழிவுகள், காகிதக்கழிவுகள், அலுமினியம் / தகரம் போன்ற கழிவுகள், உணவுக்கழிவுகள், இரசாயனக்கழிவுகள் போன்றவற்றை வீடுகளில் வைத்து தரம்பிரித்து அப்புறப்படுத்துவதன் அவசியம் குழந்தைகளுக்கும் உணர்த்தப்பட வேண்டும். சாதாரணமாக குழந்தைகள் விருப்பும் இனிப்புக்கள் பொதி செய்யப்பட்டு வரும் வர்ணமயமான பொதிகள், நெகிழி என்ற ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அவற்றை சுற்றாடலில் எறிந்து விடாமல், பத்திரமாக உரிய கழிவுத்தொட்டியில் போட வேண்டும் என்பதையும், குளிர்பானங்கள் அடைக்கப்பட்டு வரும் நெகிழி குடுவைகளை மட்டுமல்லாது, நெகிழி உள்ளடக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் பக்குவமாக உரிய முறையில் அகற்ற வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கும் அறிவுறுத்துவதோடு, பெரியவர்களும் தவறாது இதனை கடைப்பிடிக்க வேண்டியது அத்தியாவசியமாகிறது.
நன்றி: www.aftenposten.no