விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி!

  • Post author:
You are currently viewing விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் கைச்சாத்திடவுள்ளன

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு கட்சிகளும் முதலில் கூட்டமைப்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது என்றும் பின்னர் ஏனைய கட்சிகள்  மற்றும் அமைப்புக்களை இணைத்துக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டணி தொடர்பான புதிய யாப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்கூட்டணியை பதிவு செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் பெயரை மாற்றி புதிய சின்னம் ஒன்றைப் பெற்று பொதுக்கூட்டணியாக போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கூட்டணிக்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி என்று பெயரிடப்படவுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளதாகவும் தெரிகின்றது.
 
இந்த கூட்டணியில் ரெலோவிலிருந்து  பிரிந்து சென்றுள்ள எம். சிறிகாந்தா தலைமையிலான அணியினரும் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளபோதிலும் வேட்பாளர் நியமன விடயத்தில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை காரணமாக இந்த விடயம் குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை ஆனாலும்  அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து போட்டியிடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. 
 
இதேவேளை  சி.வி. விக்கினேஸ்வரன் தலைமயைிலான தமிழ் மக்கள் கூட்டணியை கட்சியாக  பதிவு செய்வதற்கான நடவடிக்கையும்  எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்  ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிவையை இவ்விடயம் தொடர்பில் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் அண்மையில் சந்தித்து கலந்துரையாடி அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள