தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு எதிராகவே விடுதலைப் புலிகள் போராடினார்கள் என தெரிவித்துள்ளார் க.வி.விக்னேஸ்வரன்.
கோட்டாபய ஆதரவு ஹிரு தொலைக்காட்சியில்,யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்ட அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி: விடுதலைப் புலிகள் அமைப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
விக்னேஸ்வரன்: நீங்கள் பார்ப்பதை போன்று பயங்கரவாதிகள் என்று யாரையும் கூறுவதில்லை. தமது மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளால் அவர்கள் யுத்தத்தில் இறங்கினார்கள். அவர்கள் யுத்தத்தில் இறங்கியதற்கு காரணம் அரசாங்கமே.
கேள்வி: உலகநாடுகள் புலிகளை பயங்கரவாத அமைப்பாக பார்க்கையில், நீங்கள் அவர்களை பயங்கரவாத அமைப்பாக ஏற்கவில்லையா?
விக்னேஸ்வரன்:அரசாங்கம் செய்யும் தவறுகளை மூடி மறைத்து அதனை கேட்பவரை பயங்கரவாதி என்று கூறுகின்றனர். அது எப்படி சரியாகும்?
கேள்வி: ஆனால் அவர்கள் மனிதக்கொலையை செய்தமை, அப்பாவிகளை கொன்றமையை ஏற்க முடியுமா?
விக்னேஸ்வரன்:இவர்கள் (அரசு) வடக்கில் அப்பாவிகளை கொன்றதை சரியென கூற முடியுமா?
கேள்வி: இராணுவத்தினர் புலிகளை தவிர, அப்பாவி மக்களை கொலை செய்தார்களா?
விக்னேஸ்வரன்: 2009 மே 18ஆம் திகதி வரை ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அனைவரும் அப்பாவி மக்கள். அவர்கள் முள்ளிவாய்க்காலிற்கு அழைத்து வரப்பட்டு கொல்லப்பட்டனர்.
கேள்வி: அவர்களை அவ்வாறு அழைத்து வந்தது பிரபாகரனா? இராணுவமா? பிரபாகரனே அவர்களை பலிக்கடாவாக பயன்படுத்தியிருக்கலாம்
விக்னேஸ்வரன்:அவருக்கு அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லையே
கேள்வி: நீங்கள் கூறுவதை பார்த்தால் பிரபாகரன் ஒரு குழந்தை. அவருக்கு ஒன்றும் தெரியாது. மக்களை பாதுகாக்க அங்கு சென்றார் என்றுதான் எங்களிற்கு தோன்றுகிறது.
விக்னேஸ்வரன்:30 வருடமாக அரசுக்கு எதிராக போராடியவரை குழந்தையாக நான் கூறுவதில்லை.
கேள்வி: நீங்கள் முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகளின் மயானத்தில் சத்தியப்பிரமாணம் செய்தீர்கள்
விக்னேஸ்வரன்: அந்த இடத்திற்கு சென்று, அந்த மக்களிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற கடமை எமக்குள்ளது.
கேள்வி: நாட்டின் சட்டத்திற்கமைய பயஙகரவாத செயற்பாடுகளிற்கு ஏதேனும் வகையில் ஒத்துழைப்பு வழங்கும் எதனையும் செய்ய முடியாது.
விக்னேஸ்வரன்: எப்படியென்று சொல்லுங்கள் பார்ப்போம். இறந்தவர்கள் பயங்கரவாதிகள் என யார் சொன்னது? இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதா?
கேள்வி:நீங்கள் வடக்கில் புத்தர் சிலை வைக்கக்கூடாது என சொல்லியுள்ளீர்களே?
விக்னேஸ்வரன்: பௌத்தர்கள் இல்லாத இடத்தில் அவற்றை வைக்க என்ன காரணம் என்றே கேட்டுள்ளேன்.
கேள்வி: அதனால் உங்களிற்கு எதாவது பிரச்சனைகள் ஏற்படுகிறதா?
விக்னேஸ்வரன்: ஆம். சிங்கள மக்களை அங்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.