விண்வெளியில் ரஷ்ய அணுவாயுதங்களா…? நேட்டோ நாடுகள் அதிர்ச்சி…!!

You are currently viewing விண்வெளியில் ரஷ்ய அணுவாயுதங்களா…? நேட்டோ நாடுகள் அதிர்ச்சி…!!
ஒஸ்லோ:
விண்வெளியில் அணு ஆயுதம் பொருத்தப்பட்ட செயற்கைக்கோளை நிலைநிறுத்த ரஷ்யா தயாராகி வருவதாக மேற்குலக உளவுத்துறைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஜேர்மனியின் #WDR, #NDR மற்றும் #Süddeutsche #Zeitung ஆகிய ஊடகங்கள் மேற்கொண்ட புலனாய்வின் அடிப்படையில், நோர்வேயின் #Dagbladet இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
“Sputnik-S” எனப்படும் அணு ஆயுதத்தைச் சுமக்கக்கூடிய செயற்கைக்கோள், மொஸ்கோவுக்கு அருகில் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் டிசம்பர் மாதத்திலேயே அது விண்வெளிக்கு ஏவப்படக்கூடும் என்றும் உளவுத்துறை வட்டாரங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
இத்தகைய அணு ஆயுதம் விண்வெளியில் வெடிக்கச் செய்யப்பட்டால், உலகளாவிய தொலைத்தொடர்பு, இணையச் சேவைகள், #GPS வழிகாட்டல் அமைப்புகள் மற்றும் இராணுவ செயற்கைக்கோள்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் இராணுவ நடவடிக்கைகள் செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களை அதிகளவில் சார்ந்திருப்பதால், இது மேற்குலக நாடுகளுக்குப் பாரிய பாதுகாப்புச் சவாலாக அமையக்கூடும்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா நிராகரித்துள்ளது. தமது விண்வெளி நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டவை எனவும் தெரிவித்துள்ளது.
1967ஆம் ஆண்டின் சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி, பூமியின் சுற்றுப்பாதையில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா உண்மையில் இத்தகைய ஆயுதத்தைத் தயாரித்துள்ளதா என்பது இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்கிற நிலையில், மேற்குலக ஊடகங்கள் இவ்வாறான பரபரப்புத்தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வல்லரசுகளின் இராணுவ ஆதிக்கப் போட்டி பூமியையும் தாண்டி விண்வெளிக்கும் விரிவடையும் அபாயம் குறித்து இந்தத் தகவல்கள் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
23.11.2026
பகிர்ந்துகொள்ள

Leave a Reply