விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி…..
தமிழ்மக்களுக்கான ஆயுதவழியிலான உரிமைப்போராட்டம் தமிழீழத்தேசியத்தலைவரால் முன்னெடுக்கப்பட்டதற்கு பிற்பாடு தேசியத்தலைவரின் தீர்கதரிசனத்தின் வெளிப்பாடாய் கேணல் கிட்டு அவர்களுக்கூடாக புலம்பெயர் கட்டமைப்புகள் உருவாக்கம் பெற்றது வரலாறு.
ஏன்? இக்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டது
தமிழீழவிடுதலைப்போராட்டத்தினை சொந்தக்காலில் நின்றால் மாத்திரமே நடாத்த முடியும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாக தன்னுடைய மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் விடுதலைப்பேராட்டத்தின் சக்தியாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அமைப்புகள் இருக்கவேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்போடு உருவாக்கம் பெற்றது.
இந்த அமைப்புகளுக்கூடாக முன்னெடுக்கப்பட்ட செயற் திறன் மிக்க செயற்பாடே தாயகத்தின் பலம்பொருந்திய போராட்டச்சக்தியாக எதிரிகளை கிலிகொள்ள வைத்த வீரசாதனைகள் நிகழ்த்தப்பட்டது.
இந்த அமைப்புகளுக்கூடாக ஈழவிடுதலைப்போராட்டத்தினை முன்னெடுப்பதோடு புலம்பெயர்ந்து வாழும் மக்களின் சமூகக்கட்டமைப்புகளையும் வளமானதாக உருவாக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு பல சமூகக்கட்டமைப்புகளும் தமிழ்மக்களுக்காக நிலத்திலும் புலத்திலும் உருவாக்கப்பட்டது.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் இனத்தின் பேராதரவோடு கட்டுக்கோப்பான தமிழின கட்டமைப்புகள் உலகெங்கும் உருவாக்கப்பட்டது இதிலே முக்கியமாக மனிதநேய அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவ அமைப்புகள், பொருண்மிய அமைப்புகள், ஊடகங்கள் என்று சமூகக்கட்டமைப்புகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன
ஒவ்வொரு துறைகளை சார்ந்தவர்களும் தாயகத்தில் அதே துறையை சார்ந்தவர்களோடு நெருக்கமான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை விடுதலை நோக்கியும் மக்களின் சமூக மேம்பாடுகள் நோக்கியும் மிகச் சிறப்பாக செயலாற்றினார்கள் இதற்காக தேசியத்தலைவரால் மதிப்பளிக்கப்பட்ட வரலாறுகள் நிறையவே உண்டு.
அதற்காக இவ்நிறுவனங்களிலும் சரி அமைப்புகளிலும் சரி குறை நடக்கவில்லை என்றும் சொல்லிவிடமுடியாது காரணம் எல்லாமே மனித மூளையில் இயங்குவதால் இடைஇடையே மனிதத்தவறுகள் வந்து போய் இருக்கின்றன ஆனாலும் கட்டுக்கோப்பான கட்டமைப்புகளால் நெறிப்படுத்தப்பட்டு சீரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன, எல்லாவற்றையும் கட்டுக்கோப்பாக இயக்குவதற்கு தன்னலமற்ற மாவீரத்தெய்வங்களின் வரலாறே வழிகாட்டியாய் ஒவ்வொரு அமைப்பிற்கும் துணையாக இருந்திருக்கிறது.
இவ் அமைப்புகளில் கடைப்பிடைத்த ஒழுக்க நெறிகள் என்ன?
1.தன்னலமற்று மக்களுக்காக சேவையாற்றுதல்
2.கொள்கை பிறழாது பயணித்தல்
3.கட்டமைப்புகளின் நெறிமுறைகளை கடைப்பிடித்தல்
4..இரண்டகம் செய்யாது நேர்மையாக செயலாற்றுதல்
5.சமூகப்பிணக்குகளை சாதுரியமாக தீர்த்தல்
6.குழுவாதங்களையும் முரண்களையும் தவிர்த்தல்
7.பொருளாதார சுரண்டலில் ஈடுபடாது இருத்தல்
8.கணக்கு விபரங்களை மாதம்தோறும் கையளித்தல்
9.செயற்பாட்டாளர்களை கண்ணியமாக வழிநடத்தல்
10.தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வழிநடத்தலை ஏற்றல்
ஆனால் 2009 இல் தமிழின அழிப்பின் பிற்பாடு இந்த கட்டமைப்புகளின் கட்டுக்கோப்பை சிதைக்க எதிரிகளும் அதன் உதிரிகளும் பல திட்டங்களை தீட்டினார்கள் காரணம் யூதர்களுக்கு ஒப்பானதாக தமிழர்களின் உலகக்கட்டமைப்பு இருப்பதனால் மீண்டும் விடுதலைப்போராட்டத்தை கட்டியெழுப்பிவிடுவார்கள் என்ற அச்சம் அவர்களை அச்சுறுத்தியதன் விளைவே விடுதலைப்புலிகளின் எச்சங்களே இருக்கக்கூடாததென்ற மனநிலைக்கு வந்தார்கள்.
அதன் முதலாவது முயற்சியாக இந்த அமைப்புகளுக்குள்ளும் நிறுவனங்களுக்குள்ளும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நெறிமுறைகளுக்கு குறிவைத்தார்கள் எதிரிகளின் குறியில் மெல்லக் கொல்லும் விசமாக சிலர் வீழ்ந்துபோனார்கள் இன்றும் வீழ்ந்து போகின்றார்கள்.
இந்த நிலைப்பாடு எப்படியான பாதிப்பை உருவாக்கும்
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகவும் பாதுகாப்பு அரணாகவும் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டாலும் உலக சனநாயக வழிமுறையில் உருவாக்கப்பட்ட புலம்பெயர் கட்டமைப்புகள் 2009இற்கு பிற்பாடும் தமிழ் இனத்தின் விடுதலைக்காக விட்டுக்கொடுக்காது போராடும் என்ற நம்பிக்கையோடு கட்டியெழுப்பப்பட்ட அமைப்புகள் விடுதலைக்காக தங்கள் உயிர்களை அற்பணித்த விடுதலை வீரர்களின் நம்பிக்கையை வீணடிக்காது இன்றும் அரசியல் பேராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இந்த பின்னணியில் எதிரிகளின் குறிப்பாக இந்திய உளவுத்துறையின் தமிழினவிடுதலை சிதைப்பின் பின்னணியில் ஒட்டுண்ணிகளாக தொங்கி நிற்கும் தமிழ்த்தேசியம் பேசியபடியே சிதைப்பாளர்களாய் களமிறக்கப்பட்டிருக்கும் ஆபத்து நிலையானது ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் இயங்கு நிலையை சுக்குநூறாக்கும் துரோக செயற்பாடாகும்.
இந்த நிலையை சரியாகவும் சாதுரியமாகவும் புரிந்து கொண்டு தமிழ்தேசிய அமைப்புகளை பாதுகாக்க தமிழ் மக்கள் பாதுகாப்பு அரணாக இருப்பது காலத்தின் கட்டாயமாகவும் கடமையாகவும் அமைகின்றது.
ஆகவே “விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி” என்ற தேசியத்தலைவரின் சிந்தனையை நெஞ்சில் ஆளமாக இருத்தி தமிழினத்தின் அமைப்புகளுக்கு நெறிபிறழ்வால் வரும் ஆபத்துகளை முறியடிக்க விழிப்போடு இருப்போம்.
நன்றி
தூயவன்