வீரத்திற்கும் மானத்திற்கும் இலக்கணமாக இந்த மண்ணில் வாழ்ந்து காட்டிய மாவீரன்தான் பண்டாரவன்னியன்.செவிவழிக் கதைகளுடன் கலந்து சொல்லப்பட்டு வந்த பண்டாரவன்னியனின் வீரவரலாற்றை ஆவண நிரூபணங்கள் கொண்ட உண்மை வரலாறாக ஆக்கும் முயற்சி என்பது காலத்தின் தேவையாகும்.
இந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் பணியினை முல்லைத்தீவு மாவட்ட பண்டாரவன்னியன் அறங்காவல் கழகம் தனது கடமையாக எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.
வரலாறு என்பது ஒரு இனத்தின் உயிரைப் போன்றது. வரலாறு ஆவணப்படுத்தாவிடின் குறித்த இனம் அடையாளம் தெரியாதபடி கால ஓட்டத்தில் அழிந்துவிடும். இதனால்தான் ஆக்கிரமித்த இனத்தின் வரலாற்றை அழித்து விடுவதில் ஆக்கிரமிப்பாளர்கள் கவனம் எடுக்கின்றனர்.
தமிழரின் வரலாற்றை அழித்து விடுவதில் சிங்களப் பேரினவாதிகள் பகீரத முயற்சிகள் எடுப்பதும் நாம் அறிந்தே தமிழரின் வாழ்விடங்களின் தொன்மைப் பெயர்களை அழித்து சிங்களப் பெயர்கள் சூட்டுவதும், தமிழரின் ஆவணக் காப்பகங்கள், நூலகங்களை எரித்து அழிப்பதும் தமிழரின் வரலாற்றை தமிழ் மாணவர்களின் பாடநூல்களில் இருந்து விலக்குவதும் என்று தமிழரின் வரலாற்றை அழிக்க சிங்களப் பேரினவாதிகள் முயற்சித்தபடியுள்ளனர்.
இதனை முறியடித்து தமிழரின் வரலாற்றை எமது சந்ததியினர் அறியும் வகையில் நூலுருவாக்கிப் பரப்புவது தமிழ் அறிஞர்களின் வரலாற்றக் கடமையாகும். ஆங்கிலேயரின் ஆயுத பலத்திற்கு அஞ்சாமல் விடுதலை உணர்வுடன் போரிட்டவன்தான் மாவீரன் பண்டாரவன்னியன்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வீரத்துடன் அந்நியரை எதிர்த்துப் போராடிய அந்த மாவீரனது கதைகள் எம்மைப் பெருமை கொள்ள வைக்கின்றன. அந்தப்போர்கள் நடந்த ஊர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது மனதில் உணர்வெழுச்சி பொங்குகின்றது.
இதற்கெல்லாம் வரலாற்று உணர்வுதான் காரணம். வரலாற்று உணர்வென்பது மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு இனம் தனது மண்ணின் பெருமைகளை உயர்விலை கொடுத்துக் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் இந்த வரலாற்று உணர்வுதான் காரணமாக இருக்கின்றது.
பண்டாரவன்னியன் போன்று இந்த மண்ணின் வீரப்புதல்வர்களது, வரலாறுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அந்த வீரவரலாறுகள் எமது எதிர்காலச் சந்ததிக்கு விடுதலையுணர்வை ஊட்டிக்கொண்டே இருக்கும்.
” பண்டாரவன்னியன் ”
துரோகிகளைச் சந்திக்க நேர்ந்த அந்த தூயவனுக்கு நல்ல நண்பர்களும் இல்லாமலில்லை. கி.பி. 1815-ம் ஆண்டு வரையில் கண்டியை ஆட்சி செய்து ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்து வேலூர் சிறையில் பதினாறு ஆண்டுக்காலம் அடைக்கப்பட்டு அந்தச் சிறையிலேயே உயிர்நீத்த கண்ணுசாமி என்ற விக்ரம ராஜ சிங்கன், பண்டாரக வன்னியனின் உயிர்த்தோழனாவான்.
எல்லை பிரிப்பு
காட்டிக் கொடுப்போரால் மனம் நொந்த அந்த மாத்தமிழனின் எரிமலை இதயத்தை சிறிது மாற்றியமைத்து, அவன் இளைப்பாறும் குளிர் தருவாக குருவிச்சி நாச்சியார் என்னும் கோதையொருத்தியும் இருந்தாள்!
மனஉறுதியின் அடிப்படையில் கட்டப்பட்ட அந்தக் காதல் மாளிகை, ஒரு வைராக்கிய மாளிகை! தியாக மாளிகை!
போர்வாளைத் தனது கொடியின் சின்னமாகக் கொண்டு – புலியெனப் பாய்ந்து களம் பல கண்ட – பண்டாரக வன்னியனின் உருவமோ;
உயர்ந்த தோற்றம்! விரிந்த மார்பு! ஒடுங்கிய இடை! பரந்த நெற்றி! உரமேறிய தோள்கள்!
கூரிய பார்வை! அந்தத் தீரனின் அஞ்சாநெஞ்ச வாழ்க்கையின் அடிச்சுவட்டில் விளைந்த வீரமண்ணின் தீரர்களையும், வீரர்களையும், தியாகிகளையும் அவர்களின் சரிதங்களையும் முத்தாரமாகக் கோத்து நான் வழங்கிய அந்தப் போர்க் காதையின் முடிவை எவ்வாறு தீட்டியுள்ளேன் என்பதைப் படித்துப் பார்த்தால் – இதோ படித்துத்தான் பாருங்களேன்!
குருவி நாச்சியார் சற்று குழப்பமடைந்தாள். பண்டாரக வன்னியன் எதிரியிடம் தோல்வியுற்று, அவனிடம் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவன் கூடாரத்தில் அமர்ந்து விருந்து அருந்துகின்றான் என்று வெள்ளையர் தளபதி எட்வர்ட் என்பவன் கூறியதைக் கேட்டு, குருவி நாச்சியார் குழப்பமடைந்தாள். ஆனால் ஒன்று – ஆங்கிலேயப் படையினரின் நவீன போர்க் கருவிகளுக்கு மத்தியில் அப்படியொரு தோல்வி பண்டாரகனுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதையும் அவளால் முழுமையாக மறுக்கமுடியவில்லை.
எனவே “சரி வருகிறேன்!” என்று கூறிக் கொண்டே வாளை உறையில் போட்டுக்கொண்டு குருவிச்சி நாச்சியார் எட்வர்டைப் பின் தொடர்ந்தாள்; பண்டாரகனை சந்திக்க!
எட்வர்டைச் சேர்ந்த இரு வீரர்களும், குருவிச்சியின் இரு வீரர்களும் முல்லைத் தீவு அரண்மனையின் முகப்பிலேயிருந்து அந்த இருவரின் பின்னால் தொடர்ந்து சென்றார்கள். ஆறு குதிரைகளும், முல்லைத் தீவின் தெருக்கள் பலவற்றைக் கடந்து நீண்ட குறுகிய சாலையொன்றில் போய்க் கொண்டிருந்தபோது எதிரில் ஒரு குதிரையில் ஓர் ஆங்கிலேய வீரன் மிக வேகமாக வந்து எட்வர்டின் முன்னால் குதிரையை நிறுத்தினான்.
எட்வர்ட், அந்த வீரனை இறுமாப்புடன் நோக்கி “என்ன?” என்றான்.
அந்த வீரன், ஒரு கடிதச் சுருளை எட்வர்டின் கையில் கொடுத்தான். எட்வர்ட், அந்த மடலைப் பரபரப்புடன் படித்துப் பார்த்தான் மனதுக்குள்ளாகவே!
“அன்புள்ள எட்வர்ட்! பண்டாரக வன்னியன், அவனது படை வீரர்கள் ஐம்பது பேருடன் ஓட்டுச் சுட்டான் பகுதியில் நெடுங்காணி சாலையருகே நமது படைகளால் வளைக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டு விட்டான். நண்பா! நீ உடனே பனங்காமம் சென்று அங்கே மிக ஆவேசமாக நம்மை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் குருவிச்சி நாச்சியாரைத் தோற்கடித்தாக வேண்டும் – இங்கனம் வான்ட்ரி பெர்க்” எனக் கடிதம் பேசிற்று!
எட்வர்ட், மனதுக்குள் மகிழ்ந்து கொண்டான்! பனங்காமம் செல்லும் வேலையில்லாமலேயே குருவிச்சியை ஏமாற்றி அழைத்துப் போகிறோமே என்ற எக்களிப்பால் அவன், தன்னைத் தானே புகழ்ந்து கொண்டான். குருவிச்சி எதுவும் நினைத்து விடக் கூடாதே என்பதற்காக அவளைப் பார்த்து புன்னகை புரிந்தவாறு “நீ முதலில் கேட்டாயே, கூடாரம் எங்கே இருக்கிறது என்று – இந்தக் கடிதத்தில் அந்த விபரம் வந்திருக்கிறது” என்றான் எட்வர்ட்!
“எங்கே இருக்கிறது?” என்றாள் குருவிச்சி
“ஓட்டுசுட்டான் பகுதி நெடுங்கேணிச் சாலையருகில் இருக்கிறதாம்!”
கடிதத்தைச் சுருட்டி, அதைக் கொண்டு வந்த வீரனிடமே எட்வர்ட் வீசி எறிந்தான். அந்த வீரன் அதை லாவகமாகப் பிடித்துக் கொண்டான்.
பண்டார வன்னியன் சொன்ன ஆறுதல்…
உயர்ந்த மரங்கள் அடர்ந்த தோப்பு. அந்தத் தோப்புக்குள்ளே ஒரு கூடாரம். கூடாரத்தையொட்டியுள்ள மரங்கள் ஒவ்வொன்றிலும் முல்லைத்தீவின் வீரன் ஒருவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறான். அப்படி ஐம்பது வீரர்கள் கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர் களுக்கு நடுவே ஒரு பெரிய வலுவான மரத்தில் சங்கிலியால் கட்டுண்டு பண்டாரக வன்னியன்.
அந்தக் கொடுமையான காட்சியைப் பார்த்ததும் குருவிச்சி, தன்னை மறந்து ஓடிப்போய் பண்டாரகனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கோவெனக் கதறிவிட்டாள். அவளது கூந்தலைக் கோதிவிட்டவாறு, பண்டாரகன் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
“கவலைப்படாதே! இந்தத் தோப்பில் களைப்பாறிக் கொண்டிருந்த எங்களைத் திடீரெனச் சூழ்ந்து கொண்டு வென்று விட்டதாக ஆர்ப்பாட்டம் புரிகிறார்கள்.”
பண்டாரகன் புலியாக உறுமினான்!
“இவர்களுடன் நீங்கள் உடன்பாடு செய்து கொண்டதாகக் கூறி என்னை அழைத்து வந்தார்களே!”
“உடன்பாடா? இலங்கை மண்ணையும் தமிழ் ஈழத்தையும் அந்நியராம் ஆங்கிலேயர்க்கு அடிமையாக்க ஒரு உடன்பாடா? அதற்கு இந்த உயிர் உள்ளவரையில் என் தலை அசையுமென நீ நம்புகிறாயா?”
குருவிச்சி பேசாமல் நின்றாள். ஏதோ தீர்க்கமாக சிந்தித்தாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக வான்ட்ரி பெர்க்கையும், எட்வர்ட்டையும் பார்த்துச் சொன்னாள்.
“அவர் அப்படித்தான் பேசுவார் – ஆனால் நான் அவரை என் வழிக்குக் கொண்டு வர முடியும் – உங்களோடு இதுவரை உடன்பாடு செய்து கொள்ளாவிட்டாலும், இனி ஒரு உடன்பாடு செய்துகொள்ள நான் தயார்! இவரும் என் பேச்சைத் தட்டமாட்டார்!”
என்று கூறிக்கொண்டே குருவிச்சி, பண்டாரகனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியபடி, “என் பேச்சைத் தட்டக்கூடாது! என்ன சரிதானா?” என்று கேட்டாள். பண்டாரகன் குருவிச்சியின் மனதைப் புரிந்து கொண்டு மௌனமாக நின்றான்.
“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி! காலமெல்லாம் ஆங்கிலேயருடன் போரிட்டு நாங்கள் களைத்துப் போய்விட்டோம். எங்களின் பழைய படைக் கருவிகள் அற்புதமானவை! ஆற்றல் வாய்ந்தவை! ஆயினும் உங்களின் நவீன ஆயுதங்கள் முன்னால் அவை நிற்க முடியவில்லை! ஆயுதங்களின்றியே நாங்கள் பல சாகசங்களைச் செய்யக் கூடியவர்கள்! வாளையும், ஈட்டியையும் வைத்துக் கொண்டே இந்த வையகம் விளங்கும் சாதனைகளைச் செய்வோம்!”
என்று குருவிச்சி பேசிக் கொண்டிருக்கும்பொழுதே, வான்ட்ரி பெர்க் குறுக்கிட்டு,
“வாளையும் ஈட்டியையும் வைத்துக் கொண்டு அப்படியென்ன வையம் புகழக்கூடிய சாதனைகளைச் செய்வீர்கள்?”
என்று வியப்புடன் கேட்டான்.
ஈட்டியும் வாளும் என்ன செய்யும்?
“எங்கள் வீரர்கள் ஐம்பது பேரை இரு பிரிவாகப் பிரித்து இருபுறமும் நிறுத்துவோம். அவர்கள் கைகளில் வாட்கள் இருக்கும். நான் என் தலையின் மீது ஈட்டியால் குத்தப்பட்ட ஒரு பெரிய பழத்தை வைத்துக்கொண்டு நடுவில் நிற்பேன். எங்கள் ஐம்பது வீரர்களும் எதிரும் புதிருமாக வாளுடன் பாய்ந்து யாருக்கும் ஒரு காயமில்லாமல் என் தலையில் ஈட்டி முனையில் உள்ள பழத்தை ஐம்பது துண்டுகளாக ஒரே வெட்டில் வெட்டுவார்கள். ஒரே ஒரு பழத்துண்டு மட்டும் ஈட்டியுடன் என் தலைமீது எஞ்சியிருக்கும்.”
குருவிச்சி இதைச் சொன்னவுடன், “அப்படியா?” என்ற கேள்வியுடன் வான்ட்ரி பெர்க், வீரர்களைப் பார்த்து “ஏய்! பண்டாரக வன்னியனைத் தவிர மற்றவர்களை அவிழ்த்து விடுங்கள்! அந்த அதிசய சாதனையை அவர்கள் நிகழ்த்தட்டும் பார்க்கலாம்” என ஆணையிட்டான்.
“பண்டாரகனைத் தவிர” என்றதும் குருவிச்சிக்குப் பெரும் ஏமாற்றம்தான்! ஆனாலும் சமாளித்துக் கொண்டாள்.
பெரிய பழமொன்றை ஈட்டியில் பொருத்தி, தன் தலை மீது வைத்துக் கொண்டு நடுவில் நின்றாள். பண்டாரகனைத் தவிர கட்டவிழ்த்து விடப்பட்ட முல்லைத் தீவின் வீரர்கள் ஒரு பக்கத்துக்கு இருபத்தைந்து பேராக வாட்களுடன் குதிரைகளில் அமர்ந்திருந்தனர்.
“உம்! பாயலாம்!” என்று குருவிச்சி தனது கையை ஓங்கித் தட்டியதுதான் தாமதம். அந்த ஐம்பது வீரர்களும் அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய வீரர்களுடன் மோதினர். பெரும் அமளிக்கிடையே பண்டாரக வன்னியனின் கட்டுக்கள் களையப்பட்டன. பண்டாரகன், பாயும் புலியாகவே ஒரு குதிரையிலேறி எட்வர்டைக் குத்திச் சாய்த்தான். நூற்றுக்கணக்கான ஆங்கிலேய வீரர்களின் உடல்கள் துண்டு துண்டுகளாகச் சிதறின.
கீழே சாய்ந்த எட்வர்டு, மரண மூச்சு விட்டுக்கொண்டே தனது துப்பாக்கியைத் தூக்கினான். துப்பாக்கிக் குண்டு, குருவிச்சியின் நெற்றிப் பொட்டை நோக்கிப் பாய்ந்தது. அதற்குள் அவளைத் தூக்கிக் கொண்டு போகப் பண்டாரக வன்னியன் குதிரையுடன் அவளிடம் பாய்ந்தான். ஆனால் அதற்குள் துப்பாக்கிக் குண்டுகள் அவள் உயிரைக் குடித்துவிட்டன.
‘காட்டுக்குள் போகும்’ வரலாறு…
அவள் மூச்சு நின்றுபோனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டாரக வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டான். எஞ்சிய அவனது வீரர்களும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
மணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள் – இலட்சியத் திருவிளக்காய் – அணைந்தும் அணையாத தியாகச் சுடர்விளக்காய் – பிணக்கோலம் பூண்டு, பண்டாரகனின் மடியில் படுத்துக் கொண்டு – அவனது இறுக்கமான தழுவலுடன் குதிரையில் வேக வேகமாகப் போய்க் கொண்டிருந்தாள்.
அவள் உயிருடனிருப்பதாகவே கருதிக்கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்று கொண்டிருந்தனர்.
காட்டுப் பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை! பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட – அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே அது வாழும் வரலாறு!”