வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினை பௌத்த அடையாளமாக மாற்ற வேண்டுமென்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிவராத்திரி பூஜைவழிபாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் எதேச்சதிகாரமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பில் கருத்துவெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இந்நிலையில் சிவஞானம் சிறீதரன் தெரிவிக்கையில்,
வெடுக்குநாறிமலை ஆலயம் இந்திய அமைதிப்படைகள் இலங்கையில் இருந்தபோதும், விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோதும் பூஜைவழிபாடுகள் இடம்பெற்று வந்தவொரு ஆலயமாகும்.
அதுமட்டுமன்றி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக வரலாறும் இதற்கு காணப்படுகின்றது. அவ்வாறான நிலையில் எமது மக்கள் மரபு ரீதியாக வழிபட்டு வந்த இந்த ஆலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு முன்னெடுத்த விசேட வழிபாடுகளை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்தச் செயற்பாடு கண்டிக்கதக்கது என்பதோடு, தற்போதும் தென்னிலங்கை சிங்கள, பௌத்த தேசியவாதிகள் அரசாங்கத்தின் கட்டமைப்புக்கின் துணையுடன் ஆக்கிரமிப்பைச் செய்வதற்கு எவ்வளவு தூரம் முனைகின்றார்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும் என்றார்.
இதேவேளை, செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கையில்,
தமிழர்களுக்கு பூர்வமாகவுள்ள பகுதிகளை தொல்பொருளின் பெயரால் முதலில் அடையாளப்படுத்துவதும் பின்னர் பௌத்த அடையாளங்களை அங்கு நிறுவுவதும் தொடர்ச்சியாக தாயகப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடாகிவிட்டது.
சிவராத்திரி பூஜை நிகழ்வுகளுக்காக நாம் வெடுக்குநாறி மலைக்குச் சென்றபோது அங்கு பௌத்த தேரர்கள் வருகை தந்தமைக்கான நோக்கம் என்ன?
அவர்கள்,வெடுக்குநாறி மலையில் தமது அடையாளங்களை அமைத்து தமது ஆக்கிரமிப்பை விஸ்தரிப்பதனையே நோக்காகக் கொண்டு அங்கு வருகை தந்திருந்தார்கள்.
ஆகவே, தென்னிலங்கையின் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன என்பதற்கு வெடுக்குநாறிமலை மீண்டும் சாட்சியாகின்றது.
அதுமட்மன்றி, பொலிஸாரும், அரச படைகளும் பெரும்பான்மை இனத்துக்கும், தேரர்களுக்கும் சாதகமாக செயற்படுகின்றார்கள் என்பதும் இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர்கள், வழிபாட்டுக்காகச்சென்ற மக்களை நடத்திய விதமும், மக்களின் பிரதிநிதியான என்னை கையாண்ட முறைமையும் அதற்கு சான்றாகின்றது என்றார்.