அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே ஹமாஸ் மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 விநாடிகளுக்குள் 2 சுற்றுகள் ராக்கெட்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதேவேளை இஸ்ரேலிய இராணுவம் காசா பகுதியில் தனது தாக்குதலை தொடர்கிறது. இதனால் இருதரப்பிலுமே உயிரிழப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என தெரிவிக்கப்படுகின்றது.
4-வது நாள் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். 3,418 பேர் காயமடைந்துள்ளனர்.
காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,250 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் இயக்கத்தினரை இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
மேற்கு கரை பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 130 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு அருகில் இரண்டாவது கடற்படை விமானம் தாங்கி கப்பலை அனுப்புவது தொடர்பில் அமெரிக்கா பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாய்க்கிழமை மாலை செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா நாசகாரி கப்பலை இஸ்ரேலுக்கு நெருக்கமாக நகர்த்துவதாக அறிவித்தது.
அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் போர் விமானங்களையும் நகர்த்தவுள்ளது.