ஹைதி நாட்டில் முக்கிய சிறைச்சாலைக்குள் புகுந்து ஆயுததாரிகள் குழு ஒன்று 4,000 கைதிகளை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலானோர் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2021ல் ஜனாதிபதி Jovenel Moïse கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்களே தற்போது ஆயுத குழு ஒன்றால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா கண்டத்தின் மிக மிக ஏழ்மை நாடான ஹைதியில் வன்முறைக்கு பஞ்சமிருந்ததில்லை. சமீப ஆண்டுகளாக வன்முறை சம்பவங்கள் மிக மோசமடைந்துள்ளது. பிரதமர் Ariel Henry-ன் பதவியை பறிக்க குறிவைத்துள்ள குழுக்களே தலைநகர் Port-au-Prince-ன் 80 சதவிகித நிலப்பரப்பை கட்டுப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் கென்யா தலைமையிலான பன்னாட்டு ராணுவ குழு ஒன்றை ஹைதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிரதமர் Ariel Henry நைரோபி புறப்பட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன.
உள்ளூரில் Barbecue என அறியப்படும் Jimmy Chérizier என்பவரே பிரதமர் Ariel Henry-ஐ நீக்கும் திட்டத்தை முன்னெடுக்க சூளுரைத்துள்ளார். முன்னாள் காவல்துறை அதிகாரியான Jimmy Chérizier தெரிவிக்கையில்,
மாகாண நகரங்களில் உள்ள ஆயுதக் குழுக்கள் மற்றும் தலைநகரில் உள்ள ஆயுதக் குழுக்கள் என நாங்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
வன்முறை சம்பவங்களை அடுத்து, தலைநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணம் செய்ய வேண்டாம் என்று தங்கள் நாட்டு மக்களுக்கு ஹைதியில் உள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக சிறைச்சாலையை வலுப்படுத்த உதவுமாறு ஹைதியின் பொலிஸ் தொழிற்சங்கம் இராணுவத்திடம் உதவி கேட்டது, ஆனால் சனிக்கிழமை சிறைச்சாலை வளாகம் தாக்கப்பட்டது.
2016ல் இருந்தே ஆட்சியில் இருந்து வந்த ஜனாதிபதி Jovenel Moïse கொல்லப்பட்ட பின்னர் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 2016க்கு பின்னர் ஹைதியில் தேர்தல் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
மக்களால் தெரிவு செய்யப்படாத பிரதமர் Ariel Henry பிப்ரவரி 7ம் திகதி பதவி விலக வேண்டும், ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.