05.07.1993 அன்று கரும்புலிகள் நாளில் தமிழீழ தேசியத் தலைவர் விடுத்த அறிக்கை

You are currently viewing 05.07.1993 அன்று கரும்புலிகள் நாளில் தமிழீழ தேசியத் தலைவர் விடுத்த அறிக்கை

எனது அன்புகுரியவர்களே !
கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினத்தில் கரும்புலி வீரர்களாகிய உங்கள் மத்தியில் கரும்புலிகள் பற்றி பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய தினத்தில் முழு இலங்கைத்தீவையும் அதிர வைத்த ஓர் சம்பவம் நிகழ்ந்தது. எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது கரும்புலி வீரன் கப்டன் மில்லர் ஓர் ஒப்பற்ற சாதனையை நிலைநாட்டினான். எமது வீரவரலாற்றில் என்றுமே நிகழாத ஓர் அதிசயம் ஒன்று அன்று நிகழ்ந்தது. எதிரியின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த ஓர் இராணுவ முகாமை இந்த இளம்புலிவீரன் தனித்த ஒருவனாகச் சென்று தகர்த்தெறிந்தான். ஒரு பெரிய படையணியாலும் செய்ய முடியாத பாரிய இராணுவ சாதனையை தனிமனிதனாகச் சென்று இவன் சாதித்து முடித்தான்.

எரிமலையை சுமந்து சென்று எதிரியின் பாசறைக்குள் வெடிக்கவைத்தான். இந்தப் பூகம்பமான தாக்குதல் நிகழ்வு அன்றைய வரலாற்றுச் சூழ்நிலையையே மாற்றியமைத்தது. எதிரியின் சைனியங்கள் நிலைகுலைந்து பின்வாங்கின. ஒரு பெரிய படையேடுப்பின் பேரழிவிலிருந்து யாழ்ப்பாணம் தப்பிக் கொண்டது. தனிமனிதனாக எமது போராளி ஒருவன் தன்னை அழித்து தனது தேசத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றினான்.
முதன் முதலாக, எமது போராட்ட வரலாறு தியாகத்தின் அதியுன்னதமான ஒரு அற்புதத்தைப் பதிவு செய்துகொண்டது. அன்றிலிருந்து எமது போராட்ட மரபில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டது. என்றுமில்லாத வகையில் ஒர் புதிய போர் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கப்டன் மில்லருடன் கரும்புலி வீரர்களின் சகாப்த்தம் ஆரம்பமாகியது. என்றுமே உலகம் கண்டிராத எண்ணிப்பார்க்க முடியாத தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது.
கரும்புலிவிரர்களின் தோற்றமும், தற்கொடைப் படையாக அவர்களின் வளர்ச்சியும் எழுச்சியும் மிக நுட்பமான அவர்களின் போர்ச் சாதனைகளும் எமது போராட்டத்தின் ஒரு வரலாற்று தேவையாகவே எழுந்தது.
நாம் இன அழிவை எதிர்கொள்ளும் ஒரு சிறிய தேசிய சமுதாயம். எமக்குக் குரல் கொடுக்கவோ உலகில் எவரும் இல்லை. நாம் தனித்து நிக்கிறோம். எமது சொந்தக் கால்களில் நிலைத்து நிற்கிறோம். பலம் வாய்ந்த எதிரிகள் எம்மைச் சூழ்ந்து நிற்கிறார்கள். எம்மை ஒழித்துக்கட்ட உறுதிபூண்டு நிற்கிறார்கள். முழு உலகமே ஒன்று திரண்டு எமது எதிரிகளுக்கு முண்டு கொடுத்து வருகிறது.

இந்த இக்கட்டாண ஆபத்தான சூழ்நிலையில் நிர்கதியாக நிக்கும் ஒரு மக்கள் சமுகம் என்ற ரீதியில் நாம் எம்மாலான சகல வழிகளையும் கையாண்டு, எமது சக்திகள் அனைத்தையும் பிரியோகித்து ஒரு தற்காப்புப் போரை நிகழ்த்த வேண்டும். இந்தத் தேவையை, நிர்பந்தத்தை நாம் அசட்டை செய்து விட முடியாது. அல்லாத பட்சத்தில் நாம் இனவாரியாக அழிந்து போவதை தவிர்க்க முடியாது.

05.07.1993 அன்று கரும்புலிகள் நாளில் தமிழீழ தேசியத் தலைவர் விடுத்த அறிக்கை 1

பலவினமான எமது மக்களின் பலம் வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள்;. எமது போராட்ட பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனோபலத்தால் உடைத்தெறியும் நெருப்புமனிதர்கள்.

கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும், பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் காணும் அழமான மக்கள் நேயம் படைத்தவர்கள். இந்த உலகில் வாழும் மனிதன் ஒவ்வொருவனும் எல்லாவற்றுக்கும் மேலாக தன்னையே காதலிக்கிறான். தனது உயிரையே நேசிக்கிறான். உயிர் வாழ வேண்டும் என்று துடிக்கிறான். மனிதன் உயிரை நேசிப்பதால் உயிர் வாழ விரும்புவதால் உயிர் அற்று போகும் சாவு என்ற இல்லாமை நிலைக்கு பயப்படுகிறான். இது மனித இயல்பு. இயற்கையின் நியதி.

ஆனால் ஒரு கரும்புலிவீரன் தன்னைவிட தனது இலட்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்த குறிக்கோளை அடைவதற்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்க்கும் அப்பால் நிற்கும் மற்றவர்களின் நலன் பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்கவேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.

தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை தழுவிக்கொள்ளும் ஒவ்வொருவனும் முதலில் தன்னை விடுதலை செய்து கொள்ளவேண்டும். தனது மனவுலக ஆசைகளிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்து கொள்பவன்தான் உண்மையில் விடுதலைவீரன் என்ற தகமையைப் பெற முடியும். மனமானது பயங்களிலிருந்து விடுதலை பெறும்போதுதான் வீரம் தோன்றுகிறது. துணிவு பிறக்கிறது.

இந்த மனவியல் உண்மையை நான் ஆரம்பத்தில் இருந்து எமது போராளிகளுக்கு எடுத்துரைத்து வருகிறேன். பயம் என்பது பலவினத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதிக்கு எதிரி. மனித பயங்களுக்கு எல்லாம் முலமானது மரணபயம். இந்த மரணபயத்தைக் கொன்றுவிடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகிறான். கரும்புலிகள் பயத்தின் வேர்களைப் பிடுங்கி எறிந்தவர்கள். சாவு அவர்களிடம் சரணடைந்து விடுகிறது. மரணத்தின் நாளை அவர்கள் எதிர்பாத்து காத்திருப்பார்கள். சாவு பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. தம்மை அழிக்கும் அந்த இறுதி கணத்திலும் தம் இலக்கை அழிக்கும் நோக்கிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பர். இலட்சிய உறுதியில் அவர்கள் இரும்பு மனிதர்கள்.
கரும்புலி என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்கும், உறுதிபாட்டிற்குமே நாம் குறிப்பிடுகிறோம்.இன்னொரு அர்த்த பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்குப் புலப்படாத ஊடகமான இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும். எனவே ” கரும்புலி ” என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும் ஆழமான படிவமாக அமையப் பெற்றிருக்கிறது.

இந்த இரகசியத்தன்மை கரும்புலி வெற்றிக்கு மூலாதரமானது. ஆளுக்கும் பெயருக்கும் அப்பால், அந்த தனிமனித தத்துவத்துக்கு அப்பால், செயற்ப்பாடே இங்கு முதன்மை பெறுகின்றது. மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே ஒரு போராட்ட வரலாற்றின் சக்கரத்தை சூழற்றுகிறது. பல கரும்புலிவீரர்கள் இன்று பெயர் குறிப்பிடாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்.
முகத்தை மறைத்து, பெயரையும் புகழையும் வெறுத்து இலட்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக் காற்றுடன் கலந்துவிட்ட இந்த சரித்திர நாயகர்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

05.07.1993 அன்று கரும்புலிகள் நாளில் தமிழீழ தேசியத் தலைவர் விடுத்த அறிக்கை 2

மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டுவிட்ட இந்த இனிமையானவர்களை நான் அறிவேன். அவர்களது நெஞ்சத்தின் பசுமையில் ஊற்றெடுத்த உணர்வுகளையும் நான் புரிவேன். ஏதோ ஒன்று மனித விடிவை நோக்கி நகரும் உந்து சக்தியாக அவர்களை ஆட்கொண்டிருந்தது. அந்த விடுதலையின் தாகத்தை தீர்க்க எதையும் செய்வதற்க்கு அவர்கள் தயாராக இருந்தார்கள். அவர்களை அரவணைத்து விடையளிக்கும்போது இனம் புரியாத உணர்வுகளால் என் ஆன்மா நடுங்கும். ஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிற்கும் எமது தேச மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு கிடைக்கும் என்ற அசையாத நம்பிக்கையில் அந்த தியாகப் பயணத்தை தொடர்ந்தார்கள். அந்த புனிதர்களை எண்ணும் பொழுதெல்லாம் எனது நெஞ்சு புல்லரிக்கும். கரும்புலி வீரர்கள் பற்றி இன்று உலகமெல்லாம் பேசுகிறது. அவர்களது மகத்தான தியாகத்தை கண்டு மலைத்துப் போய் நிக்கிறது.
பூகம்ப அதிர்வாக குமுறும் எமது போராட்டத்தின் உக்கிரத்தை உலக சமுதாயற்கு உணர்த்தியவர்கள் கரும்புலிகளே. அன்றோரு காலம் அமைதி வழியில் உரிமை கேட்டு ஆர்பரித்த தமிழினத்தை அடக்குமுறையாளனின் இரும்புக்கரங்கள் நசுக்கி விட்டன. இன்று நீதிகேட்டு நெருப்பாக எரியும் தமிழரின் ஆவேச எழுச்சியை எந்தச் சக்திகளாலும் நசுக்கிவிடமுடியாது.

‘இது கரும்புலிகளின் சகாப்தம்” இடியும் மின்னலுமாக விடுதலைப் புலிகள் போர்க்கோலம் கொண்டுவிட்ட காலம். இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் புதிய பரிமாணங்களில் விரியும் சாவுக்கு விலங்கிட்ட மறவர்கள் புதிய சரித்திரம் படைப்பார்கள். எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்றி வைப்பார்கள்.
கரும்புலிகளின் புனித தினமாகிய இன்றைய நாளில் வரைபடாத சித்திரங்களாகவும் எழுதப்படாத சரித்திரங்களாகவும் எமது வாழ்வுக்காக தமது வாழ்வைத் துறந்த அந்த அற்புதமான தியாகிகளை எமது நெஞ்சில் நிறுத்தி பூசிப்போமாக.

தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வே. பிரபாகரன்.
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments