அமெரிக்கா பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஈரான் மேலும் 100 இலக்குகளை குறிவைக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் ஐன் அல்-ஆசாத் விமான தளம், எர்பில் தளமும் பாதிக்கப்பட்டு உள்ளன.
2003 யு.எஸ் தலைமையிலான படையெடுப்பிற்குப் பிறகு ஐன் அல்-ஆசாத் விமானத் தளம் அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க துருப்புக்கள் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் சுமார் 1,500 அமெரிக்க நாட்டின் கூட்டணி படை வீரர்கள் உள்ளனர்.
இங்கு சுமார் 70 நார்வே வீரர்களும் இந்த விமான தளத்தில் இருந்தனர். ஆனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று நார்வே ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரைஞ்சர் ஸ்டோர்டல் தெரிவித்தார்.
இந்தநிலையில், ஈராக்கில் இருந்த அமெரிக்க இலக்குகள் ஈரானால் ஏவப்பட்ட 15 ஏவுகணைகள் தாக்குதல்களில் குறைந்தது 80 “அமெரிக்க பயங்கரவாதிகள்” கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி கூறி உள்ளது. மேலும் ஏவுகணைகள் எதுவும் தடுக்கப்படவில்லை என்றும் கூறி உள்ளது.
மேலும் அமெரிக்கா ஏதேனும் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், ஈரான் மேலும் 100 இலக்குகளை குறிவைக்கும் என்று ஒரு மூத்த புரட்சிகர காவல்படை ஆதாரத்தை மேற்கோள் காட்டி அரசு டிவி கூறி உள்ளது. அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் “கடுமையாக சேதமடைந்துள்ளன” என்றும் அது கூறி உள்ளது.
இந்த தாக்குதலில் ஃபத்தே -110 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அவை 186 மைல் அல்லது 300 கி.மீ. சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இந்த தாக்குதலுக்கு ‘தியாகி சுலைமானி ‘ என்று பெயரிடப்பட்டு உள்ளது என அரசு டிவி கூறி உள்ளது.