115 பரிந்துரைகளை நிராகரித்த இலங்கை!- மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை விசனம்.

You are currently viewing 115 பரிந்துரைகளை நிராகரித்த இலங்கை!- மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை விசனம்.

ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மரண தண்டனையை ஒழித்தல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட 115 பரிந்துரைகளை இலங்கை ஏற்காமை குறித்துக் கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவை, இம்மீளாய்வுக்குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான குழுவானது இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த 4 ஆவது மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்தது.

இம்மீளாய்வின்போது கண்டறியப்பட்ட விடயங்களையும், மனித உரிமைகள் பாதுகாப்பை முன்னிறுத்தி இலங்கை மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றிய 294 பரிந்துரைகளையும் உள்ளடக்கிய 24 பக்க அறிக்கை கடந்த மாத நடுப்பகுதியில் வெளியாகியிருந்தது.

அதன்படி கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரின் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமர்வில், இலங்கை தொடர்பான உலகளாவிய காலாந்தர மீளாய்வு அறிக்கை நிறைவேற்றப்பட்டது.

இதன்போது பேரவையில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக, உலகளாவிய காலாந்தர மீளாய்வு அறிக்கையில் மொத்தமாக உள்ளடக்கப்பட்டுள்ள 294 பரிந்துரைகளில் 173 பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாகவும், 115 பரிந்துரைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் (ஏற்றுக்கொள்ளவில்லை), 6 பரிந்துரைகளை நிராகரிப்பதாகவும் அறிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவையும், இலங்கையிலுள்ள அதன் பங்காளி அமைப்பான மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையமும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:

உலகளாவிய காலாந்தர மதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் இலங்கை வெளிக்காட்டியுள்ள துலங்கல் அதிருப்தியளிக்கின்றது.

குறிப்பாக இலங்கை ‘அவதானம் செலுத்துவதாகக்’ கூறியுள்ள அனைத்துப் பரிந்துரைகளும் பெரும்பாலும் மரண தண்டனையை முற்றாக இல்லாதொழித்தல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்டவையாக உள்ளன.

அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1, 46ஃ1 மற்றும் 51ஃ1 ஆகிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை இலங்கை நிராகரித்திருப்பது தீவிர கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.

இருப்பினும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால் அண்மையில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்திலும் கரிசனைக்குரிய சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் அவை சர்வதேச சட்டங்களின் பிரகாரம் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அமையவில்லை.

அதுமாத்திரமன்றி பெரும்பாலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் தன்னிச்சையான தடுத்துவைப்புக்களை முடிவுக்குக்கொண்டுவருமாறும், நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு உட்படுவதற்கான உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துமாறும் இவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் உலகளாவிய காலாந்தர மீளாய்வைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் அதேவேளை, சர்வதேச சட்டத்துக்கு அமைவாக இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply