12 ஆணைக்கு குழுக்களுடன் தீர்வில்லை! சர்வதேசம் எமக்கான நீதியை தரவேண்டும்!

You are currently viewing 12 ஆணைக்கு குழுக்களுடன் தீர்வில்லை! சர்வதேசம் எமக்கான நீதியை தரவேண்டும்!

சர்வதேசமும் இணைந்தே எமது போராட்டத்தை அழித்தமையால் எமக்கான நீதியை அவர்களே தரவேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க மாவட்ட அலுவலகதில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 20ம் திகதியுடன் 6 ஆண்டு நிறைவடைகிறது. இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை.

இனத்தாலும், மொழியாலும் ஒதுக்கப்பட்டே எமது பிள்ளைகள் ஆயுதம் ஏந்தி போராடினர். வடக்கு கிழக்கில் உள்ள அனைவரும் அதற்காகவே போராடினர்.

அந்த போராட்டத்தின் ஊடாக இன்று சர்வதேசம் எம்மை பார்க்கின்றது. இன்றும் நாம் ஈழத்தில்தான் இருக்கிறோம். உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்திற்கு இலங்கை அரசினால் தீர்வு வழங்க முடியாது. இதுவரை இலங்கை அரசினால் நிறுவப்பட்ட 12 ஆணைக்கு குழுக்களுடன் பேசினோம். நீதி எமக்கு கிடைக்கவில்லை.

அண்மையில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடன் சந்திக்க கேட்டனர். அதனை நாங்கள் மறுத்தோம். இந்த ஆணைக்குழு அரசின் ஆணைக்குழு. அது பாதிக்கப்பட்டோருக்கு நீதி தருவதாக இருந்ததில்லை. ஜெனிவாவின் 31வது கூட்டத்திலிருந்து நாங்கள் சென்று வருகின்றோம். சுயாதீன ஆணைக்குழு நிறுவப்பட்டதாகவும் அவர்களுடன் பேசுமாறும் கூறினர்.

இதன்போது குறித்த ஆணைக்குழுவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரில் ஐவரது விபரங்களை கையளித்தோம். இன்றுவரை பதில் இல்லை. பதில் சொல்ல முடியாத ஆணைக்குழுக்களுடன் பேசி பயன் இல்லை. அரசுக்கு ஆதரவாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும் செயற்படுகிறது

நாம் இலக்கை அரசை நம்ப போவதில்லை. அவர்கள் எமக்கு நீதி தரப்போவதில்லை. சர்வதேசத்தை நம்பி நீதி கேட்கிறோம். அதனை பெற்று தரவேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் சர்வதேசமும் இணைந்தே விடுதலை புலிகளையும், எமது போராட்டத்தையும் தோற்கடித்தனர்.

இலங்கை அரசு மட்டும் யுத்தம் செய்திருக்கவில்லை. சர்வதேச நாடுகளும் இணைந்தே தோற்கடித்தது.

இந்த நிலையில், எமது தொடர் போராட்டம் 6 ஆண்டினை நிறைவு செய்கிறது. எதிர்வரும் 20ம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளோம். குறித்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் கட்சி பேதங்கள் இன்றி ஆதரவு தர வேண்டும். வர்த்தகர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் வேண்டும் என இதன்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply