ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில் சுமார் 20,000 ஆப்கான் அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கவுள்ளதாக இங்கிலாந்து அரசு உறுதியளித்துள்ளது.
புதிய திட்டத்தில் கீழ் அடுத்துவரும் ஆண்டுகளில் 20,000 ஆப்கானியர்கள் இங்கிலாந்தில் குடியமர்த்தப்படுவார்கள் என இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரிதி படேல் தெரிவித்தார்.
இந்திட்டத்தின் முதல் கட்டமாக 5,000 பேருக்கு அடைக்கலம் அளிக்கப்படும். இதில் பெண்கள் மற்றும் ஆபத்தான பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவா் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படையினருக்கு மொழி பெயர்ப்பாளர்களாக பணியாற்றியோர் மற்றும் தூதரகப் பணியாளர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் திட்டத்திற்க்கு மேலதிகமாக இந்தப் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காபூலில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை செவ்வாய்க்கிழமை மாலை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து முடிந்தவரை மேலும் அதிகளவானவர்களை வெளியேற்ற இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக பிரதமர் போரிஸ் ஜோன்சனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அத்துடன், பைடனுடன் பேசியபோது, கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அடைந்த பயன்களை இழந்துவிடாதிருப்பதின் முக்கியத்துவத்தையும், பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து சா்வதேசத்தைப் பாதுகாப்பதன் தேவையையும் ஜோன்சன் வலியுறுத்தினார்.
மேலும் ஆப்கான் மக்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்க வேண்டிய தேவை குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக ஜோன்சனின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.