உக்ரைன் மீதான படையெடுப்பில் இதுவரை ரஷ்யாவின் 24,900 படை வீரர்கள், 1,110 பீரங்கிகளை அழித்துள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தது. ரஷ்யாவின் திட்டம் தொடர்பில் அமெரிக்கா பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்ததுடன், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க சாத்தியமான நேரத்தையும் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், கடந்த 70 நாட்களுக்கும் மேலாக உக்ரைனின் பல பகுதிகளில் கடுமையான தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்து வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் உருக்குலைந்துள்ளன.
பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை விநியோகிக்கும் ரயில் நிலையங்கள், உருக்கு ஆலை, வானுயர்ந்த கட்டிடங்கள் என முக்கிய உள்கட்டமைப்புகளை ரஷ்ய படைகள் தகர்த்துள்ளன.
இருப்பினும் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து கடும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையிலேயே, உக்ரைன் வெளிவிவகார அமைச்சகம் சமூக ஊடக பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், எங்கள் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரில் நாங்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். இதுவரை 24,900 ரஷ்ய வீரர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர். 1,110 பீரங்கிகள், 199 விமானங்களை அழித்துள்ளோம்.
மேலும் 155 ஹெலிகொப்டர்கள், 2,686 கவச வாகனங்கள், 502 வெடிகுண்டு வீசும் சாதனங்களை அழித்துள்ளோம். மட்டுமின்றி, ரஷ்யாவின் 1,900 வாகனங்கள், எரிபொருள் டேங்குகளையும் அழித்துள்ளோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.