42 தேக்கு மர குற்றிகளை மீட்ட வனவளத்திணைக்களத்தினர்

You are currently viewing 42 தேக்கு மர குற்றிகளை மீட்ட வனவளத்திணைக்களத்தினர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிப்பு பகுதியில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் மீள் வனமாக்கல் திட்டத்தின் கீழ் 40 கெக்டேயர் பரப்பில் தேக்கு மரங்கள் வெட்டுவதற்காக அரசமர கூட்டுத்தாபனத்திற்கு ஒப்பந்தம் ஒன்று வழங்கப்பட்டு அந்த வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த ஒப்பந்தத்தை பயன்படுத்தி குறித்த பகுதியில் இருந்தும் அதனை அண்டிய பகுதியில் இருந்தும் வெட்டப்படுகின்ற தேக்கு மரங்கள் சட்டவிரோதமாக அந்த பகுதியில் விற்பனை செய்யப்படுவதாகவும் அவ்வாறான செயற்பாடுகளில் ஒன்றாக குமுழமுனை கிழக்கு பகுதியில் தேக்கு மரங்களை மாத்திரம் பயன்படுத்தி மாடி வீடு ஒன்றை அமைத்து வருகின்றனர் எனவும் மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து செய்தி அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர் மீது 12.10.2020 தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற முள்ளியவளை வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து நடாத்திய சோதனை நடவடிக்கையில் அந்தக் காணியில் கொண்டு வந்து போடப்பட்டிருந்த 42 தேக்கு மர குற்றிகளை அனுமதிப்பத்திரமோ அரச முத்திரையோ இல்லாத நிலையில் மீட்டு வனவளத்திணைக்களத்துக்கு கொண்டுவந்துள்ள நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்

பகிர்ந்துகொள்ள