தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,நேற்று ஜெனிவா சென்றுள்ளார். இன்று முதல் அவர் அங்கு முக்கிய நிகழ்வுகளிலும் உயர்மட்ட சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கும் அவர், பேரவையின் உயர்மட்டப்பிரதிநிதிகளைச் சந்தித்து பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
இதேவேளை
பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் தொழிற்கட்சி உறுப்பினர்களும், இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு விவகாரத்தில் முனைப்புடன் செயலாற்றி வருவோருமான எட் டேவி, சியோபைன் மெக்டொனாக் மற்றும் பெரி கார்டினர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், கடந்தகால அறிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை அறிக்கை மென்போக்கைக் கடைப்பிடித்திருப்பது போல் தெரிவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் எடுத்துரைத்தார்.
அதுமாத்திரமன்றி பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமைதாங்கும் பிரிட்டன் இவ்விடயத்தில் அக்கறை காண்பிக்கவேண்டும் என்றும், இலங்கை அரசாங்கத்தின்மீது வலுவான அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதற்குப் பதிலளித்த தொழிற்கட்சி உறுப்பினர்கள், இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் தற்போதைய பூகோள அரசியல் நிலைமைகளையும், உள்ளக நிலவரத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்து, எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறான பொதுநிலைப்பாட்டின் அடிப்படையிலான பொறிமுறையொன்றை முன்மொழிவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கேட்டுக்கொண்டனர்.