கடந்த 02/09/2022 ஆரம்பித்த மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் இன்றோடு 7ம் நாளாக (08/09/2022) அர்லோன்,பெல்சியம் மாநகரத்தினை கடந்தது. அர்லோன் நகரபிதாவினை சந்தித்த வேளை , தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும் மற்றும் தமிழீழமே தமிழர்களுக்கான தீர்வாக அமையும் என்பதனையும் எடுத்துக்கூறப்பட்டது. குறிப்பாக தமிழீழத்தின் வரலாறு மற்றும் 2009 ஆண்டு சிறிலங்காப் பேரினவாத சர்வாதிகார அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தமிழினவழிப்பு போன்ற விடயங்களை கேட்டறிந்தனர். மேலும் எதிர்வரும் 51 வது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரினை முன்னிட்டு நடைபெறும் இவ்வறவழிப்போராட்டத்தின் முக்கியத்துவத்தினையும் பெல்சியம் நாட்டின் வெளி நாட்டமைச்சிடமும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையின் அவசியத்தினையும் தான் நிச்சயம் எடுத்துரைப்பதாக கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில் ஊடகங்களுக்கு தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தின் தகவற் பரிமாற்றங்களை மேற்கொள்வதாக கூறி மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.
வழமை மாறாத வரவேற்போடு சுடுபானங்களை பகிர்ந்தழித்தமை மேலும் உற்சாகத்தினை தந்தது. மேலும் தமிழீழ மக்களின் நியாயமான போராட்டத்தின் தன்மையினை சர்வதேசம் நிச்சயம் ஏற்றுக்கொள்வதோடு நீதியும் விடுதலையும் விரைவில் கிட்டும் எனும் மன உறுதியோடு இப்போராட்டம் லுக்சாம்பூர்க் நாட்டினை ஊடறுத்தது. தொடர்ந்தும் யேர்மனி நாட்டினை அண்மித்தபடி போராட்டம் இலக்கினை நோக்கி விரைகின்றது.
“மக்கட் புரட்சி வெடிக்கட்டுக் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”
- தியாக தீபம் லெப்.திலீபன் அண்ணா
«எதிரியால் ஆக்கிமிக்கபட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றின் தேவை. இந்த வரலற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது»
- தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.