7300 பணியாளர்களை இடைநிறுத்தும் “Norwegian” விமான சேவை நிறுவனம்!

You are currently viewing 7300 பணியாளர்களை இடைநிறுத்தும் “Norwegian” விமான சேவை நிறுவனம்!

நோர்வேயின் புகழ்பெற்ற மலிவுவிலை விமானசேவை நிறுவனமான “Norwegian” நிறுவனம், தனது 7300 பணியாளர்களை இடைநிறுத்துவதாகவும், தனது 85 வீதமான பறப்புக்களை இடைநிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

மேற்படி 7300 பணியாளர்களில், விமானிகள், விமானப்பணியாளர்கள், விமான பராமரிப்பாளர்கள் மற்றும் நிறுவனத்தின் நிர்வாக பணியாளர்களென பலரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 21.03.20 முதல் நடைமுறைக்கு வரும் விமானசேவை நிறுவனத்தின் முடிவுகளின்படி, நோர்வேக்கான உள்ளூர் விமான சேவைகளும், “நோர்டிக்” நாடுகளுக்கான சேவைகளும் கணிசமானளவுக்கு குறைக்கப்படுமெனவும் எனினும், ஐரோப்பாவுக்கான முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சேவைகள் நடைபெறுமெனவும், குறிப்பாக ஸ்கண்டிநேவியா மற்றும் தாய்லாந்துக்கு இடையிலான சேவைகள் தொடர்ந்து நடைபெறுமெனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“கொரோனா”பரவலின் எதிர்விளைவுகளை கருத்தில் கொண்டே மேற்படி முடிவுகள் எடுக்கப்படுவதாக தெரிவித்திருக்கும் நிறுவனத்தின் தலைவர், “Jacob Schram”, நிலைமைகள் வழமைக்கு திரும்பும் பட்சத்தில் மிக விரைவாகவே தமது சேவைகள் மீண்டும் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டென்மார்க், சுவீடன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் கூட்டு விமானசேவை நிறுவனமான “Scandinavian Airline System” அல்லது “SAS” எனப்படும் பிரபல விமானசேவை நிறுவனம் தனது 10.000 பணியாளர்களை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளதும், நோர்வேயின் உள்ளூர் விமான சேவை நிறுவனமான “Wederøe” நிறுவனமும் தனது பணியாட்களில் குறைப்பு செய்வதாகவும், பறப்புக்களை இடை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள