இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பின் ஊடாக ரணில் விக்கிரமசிங்க 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலையடுத்து ஜனாதிபதி பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறங்கினர்.
ஜனாதிபதி தெரிவிற்கான வேட்புமனு தாக்கல் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிலையில் , இன்று முற்பகல் 10.20 க்கு அதற்கான வாக்களிப்பும் ஆரம்பமானது. வாக்களிப்பு ஆரம்பமானதையடுத்து முதலாவது வாக்கினை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பதிவு செய்தார். இரண்டாவது வாக்கினை பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிவு செய்தார்.
தொடர்ந்து 22 ஆவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது வாக்கினை பதிவு செய்ததோடு , வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் முறையே 42 ஆவதாகவும் , 99 ஆவதாகவும் தத்தமது வாக்குகளைப் பதிவு செய்ததனர். தொடர்ந்து 167 ஆவதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாக்குப் பதிவு செய்த அதே வேளை , 205 ஆவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்கு பதிவு செய்தார்.
இன்று சபை அமர்வில் கலந்து கொண்டவர்களில் அகில இலங்கை தமிழ் காங்ரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரை தவிர ஏனைய அனைவரும் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
இவ்வாறு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற வாக்குபதிவு முற்பகல் 11.50 க்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் வாக்கெண்ணும் பணிகள் சுமார் 45 நிமிடங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக ஹரின் பெர்னாண்டோவும் , டலஸ் அழகப்பெருமவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக டிலான் பெரேராவும் , அநுரகுமார திஸாநாயக்கவின் வாக்குகள் எண்ணப்படுவதை கண்காணிப்பதற்காக விஜித ஹேரத்தும் நியமிக்கப்பட்டனர்.
வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்த பின்னர் , பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அவரால் அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அளிக்கப்பட்ட 223 வாக்குகளில் 219 செல்லுபடியாக வாக்குகள் என்பதோடு , 4 செல்லுபடியற்ற வாக்குகளாகும். அதற்கமைய செல்லுபடியான 219 வாக்குகளில் , 134 வாக்குகளைப் பெற்று ரணில் விக்கிரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
இதே வேளை தேர்தலில் களமிறங்கிய ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க 3 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அதே வேளை , சக வேட்பாளரான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
1993 மே தினத்தன்று அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொலை செய்யப்பட்டதையடுத்து , அன்றைய தினமே பதில் ஜனாதிபதியாக டிக்கிரி பண்டார விஜேதுங்க பதவி பிரமாணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 1993 மே 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஏகமனதாக இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அன்று வேறு டி.பி.விஜேதுங்கவை தவிர வேறு வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்காமையால் , வாக்கெடுப்பின்றி அவர் இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இம்முறை 3 வேட்பாளர்கள் களமிறங்கியமையால் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் இடைக்கால ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார்.
இதன் காரணமாகவே இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் ஊடாக இடைக்கால ஜனாதிபதி தெரிவு இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பமாக இது பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.