ரஷ்ய பாதுகாப்புத்தரப்புக்களிடம் இருக்கக்கூடிய அதிநவீன ஏவுகணையான “Kinzjal” இரக ஏவுகணைகளை ரஷ்யா பாவனைக்கு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இவ்வகையான 6 ஏவுகணைகளை உக்ரைன் மீது ரஷ்யா ஏவியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஒலியின் வேகத்தைவிட 10 மடங்கு அதிகமான வேகத்தில் செல்லக்கூடிய இவ்வகை ஏவுகணைகளை எதிர்த்து சுட்டு வீழ்த்துவதானது இயலாத காரியமென தெரிவிக்கும் இராணுவத்தரப்புக்கள், தற்போது பாவனையிலுள்ள “ராடார்” சாதனங்கள், இவ்வகையான ஏவுகணைகளை கண்டறிந்துகொள்வதற்கு முன்னதாகவே ஏவுகணைகள் இலக்கை அடைந்துவிடும் என்பதால், அவற்றை முன்கூட்டியே கண்டறிவது இயலாதது எனவும் தெரிவிக்கின்றன.
“Kinzjal” இரக ஏவுகணைகளை 2018 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய ரஷ்ய அதிபர், இவை கண்களுக்கு புலப்படாதவை என குறிப்பிட்டிருந்தமை நினைவுகூரத்தக்கது. இந்நிலையில், அமெரிக்காவும், மேற்குலகமும் பெருவாரியான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கிவரும் நிலையிலும், ரஷ்யாவின் தாக்குதல்கள் நாளுக்குநாள் அதிகரிக்கப்பட்டுவருவது அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தை விசனமடைய வைத்துள்ளதோடு, தற்போது ரஷ்யாவிடம் இருக்கக்கூடிய இராணுவ பலமும், பொருளாதாரமும், இன்னும் இரு வருடங்களுக்கு உக்ரைன் நிலைமையை இதே நிலையில் வைத்திருக்கக்கூடியவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.