WHO : கொரோனா பற்றிய உண்மை விவரங்களை சீனா தரவில்லை!

  • Post author:
You are currently viewing WHO : கொரோனா பற்றிய உண்மை விவரங்களை சீனா தரவில்லை!

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், உலக சுகாதார நிறுவனத்துக்கும் மோதல் போக்கு உருவானது. கொரோனா பற்றிய உண்மை தகவல்களை மூடி மறைப்பதற்கு சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அந்த அமைப்புக்கான தனது நிதியை நிறுத்தி வைத்தது.

இந்த நிலையில் அதிரடியாக கடந்த வாரம் உலக சுகாதார நிறுவனத்துடனான தனது உறவை அமெரிக்கா துண்டித்துள்ளது. அந்த நிறுவனத்துக்கு வழங்கி வந்த பெருந்தொகையை நிறுத்திக்கொண்டு, அதை தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பப்போவதாக டிரம்ப் அறிவித்தார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம், சீனாவுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தது. உலக அரங்கில் சீனாவை பாராட்டியும் வந்தது.

குறிப்பாக கொரோனா வைரசுக்கு எதிராக சீனா விரைவான பதிலடி கொடுத்தது என்றும், வைரசின் மரபணு வரைபடத்தை பகிர்ந்து கொண்டது என்றெல்லாம் பாராட்டி மகிழ்ந்தது, உலக சுகாதார நிறுவனம்.

ஆனால் உண்மை அதுவல்ல என்று நிரூபித்துக்காட்டுகிற வகையில் இப்போது அதிர்ச்சியூட்டும் சில உண்மை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான சோதனைகள், மருந்துகள், தடுப்பூசிகள் ஆகியவற்றை வடிவமைப்பதற்கு தேவையான விவரங்களை சீனா பகிர்ந்து கொள்ளாமல், பல அரசாங்க ஆய்வகங்கள் முழுமையாக கொரோனா வைரசின் மரபணு வரிசைகளை கண்டறிந்த பின்னர், அதை வெளியிட சீன அதிகாரிகள் காத்திருந்தனர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம், சீன பொது சுகாதார அமைப்பினுள் தகவல்களை பகிர்ந்து கொள்ள இருந்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள்தான் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கண்டறிந்துள்ளது.

சீன அரசின் உள் ஆவணங்கள், மின்னஞ்சல்கள் மூலம் இதை அந்த செய்தி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

சீன ஆய்வுக்கூடம் ஒன்று ஜனவரி 11-ந் தேதி வெளியிட்ட பின்னர்தான், அரசு சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரசின் மரபணு வரைபடத்தை வெளியிட்டுள்ளனர்.

அப்படி இருந்தும், உலக சுகாதார நிறுவனத்துக்கு தேவையான விவரங்களை, தகவல்களை, வழங்காமல் மேலும் 2 வாரங்களுக்கு இழுத்தடித்துள்ளனர்.

இது, ஜனவரி மாதத்தில் நடந்த உலக சுகாதார நிறுவனத்தின் உள் கூட்டங்களில் செய்யப்பட்ட பதிவுகளில் இருந்து இந்த செய்தி நிறுவனத்துக்கு தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை அப்போது வியக்கத்தக்க அளவில் குறைத்திருக்க முடியுமாம். தாங்கள் பெற்றுள்ள பதிவுகள், சீனாவை வெளியரங்கில் பாராட்டிய உலக சுகாதார நிறுவனம், உள்ளுக்குள் கவலைப்பட்டதை காட்டுகின்றன என அந்த செய்தி நிறுவனம் கூறுகிறது.

அதிலும், கொரோனா வைரஸ் தொற்றால் எந்தளவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை மதிப்பிடுவதற்கான விவரங்களைக்கூட சீனா உரிய நேரத்தில் பகிர்ந்து கொள்ள வில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கருதி உள்ளது.

சீனாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரியான டாக்டர் காடன் கலியா கூறும்போது, “சீன அரசு தொலைக்காட்சியில் வெளியாவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் (கடைசி நேரத்தில்) எங்களுக்கு அவர்கள் (சீன அரசு) அதை கொடுத்தார்கள்” என்று கூறியுள்ளார்.

ஆனால் சீன அதிபர் ஜின்பிங், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை சீனா உலகுக்கும், உலக வர்த்தக நிறுவனத்துக்கும் எப்போதுமே சரியான நேரத்தில் வழங்கி வந்துள்ளது என்று குறிப்பிட்டு வந்துள்ளார் என்பதுவும் நினைவு கூறத்தக்கது.

சர்வதேச சட்டங்கள், பொது சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை உலக சுகாதார நிறுவனத்துக்கு நாடுகள் வழங்க வேண்டும் என்று சொல்கின்றன.

ஆனாலும் உலக சுகாதார நிறுவனத்துக்கு இதில் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடிய அதிகாரம் இல்லை. மாறாக உலக சுகாதார நிறுவனம், உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை நம்பி இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

சீனாவுடன் உலக சுகாதார நிறுவனம் கூட்டணி அமைத்துக்கொண்டது என்பதைவிட, உலக சுகாதார நிறுவனம் இருட்டில் வைக்கப்பட்டிருந்தது என்று இந்த செய்தி நிறுவனம் கண்டறிந்து இருக்கின்றது.

உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சி

கொரோனா வைரசைப் பொறுத் தளவில் சீனா மிக குறைவான தகவல்களை மட்டுமே அளித்துள்ளது. ஆனால் சீனாவின் பெயர் கெட்டு விடாமல் நல்ல முறையில் திகழ்வதற்கு உலக சுகாதார நிறுவனம் முயன்றுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றிய கூடுதலான தகவல்களை எப்படி சீன அதிகாரிகளை கோபப்படுத்தாமல், சீன விஞ்ஞானிகளை பாதிக்காமல், சீனாவிடம் இருந்து கேட்டுப்பெற அழுத்தம் தருவது என உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் கவலைப்பட்டு ள்ளார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பிரிவின் தலைவர் டாக்டர் மைக்கேல் ரேயான், உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனாவை பாதுகாப்பதற்கான சிறந்த வழி, தனது சொந்த சுயாதீனமான ஆய்வை செய்வதுதான். ஏனெனில், கொரோனா வைரஸ் பரவல் மக்களிடையே கேள்விக்குரியதாக இருக்கும், பிற நாடுகளும் அதற்கேற்ற நடவடிக்கை எடுக்கும் என்கிறார்.

கொரோனா வைரஸ் மரபணு வரிசை முதன்முதலில் ஜனவரி 2 ம் திகதி கண்டறியப்பட்டதி லிருந்து, ஜனவரி 30 ம் திகதி உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது வரை, கொரோனா வைரஸ் தொற்று 100 முதல் 200 மடங்குவரை அதிகரித்துள்ளது என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய தகவல்கள் கூறுகின்றன.

செய்தி நிறுவனம் தான் பெற்றுள்ள ஆதாரங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் கூட்ட பதிவுகள் பற்றிய ஒலி அல்லது எழுத்து ஆதாரங்கள் இன்றி, கேள்விகள் எழுப்பியபோது அதற்கு உலக சுகாதார நிறுவனமும், பெயரிடப்படாத மூத்த அதிகாரிகளும் பதில் அளிக்க மறுத்து விட்டதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறுகின்றது.

அதே நேரத்தில் உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில், “எங்கள் தலைமையும், ஊழியர்களும் உறுப்பு நாடுகளுக்கு சம அளவில் தகவல்களை பகிர்ந்து கொடுப்பதில் இரவு, பகலாக உழைத்தனர். அரசுகளுடன் வெளிப்படையான உரையாடல்களில் ஈடுபட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சீன சுகாதார அமைப்பு எந்தவொரு கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் . சீனா நினைத்திருந்தால், கொரோனா வைரஸ் பரவலை அந்த நாட்டுக்குள் கட்டுப்படுத்தி இருக்க முடியும் என்ற டிரம்பின் வார்த்தைகள் இப்போது நம்பத்தகுந்தவையாக இருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது!

பகிர்ந்துகொள்ள