அணு ஆயுதங்களை சீனா அதிவேகமாக குவித்து வருவதாக அமெரிக்கா கவலை!

You are currently viewing அணு ஆயுதங்களை சீனா அதிவேகமாக குவித்து வருவதாக அமெரிக்கா கவலை!

சீனாவின் அணு ஆயுத குவிப்பு குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

கன்சு மாகாணத்தில் சீனா 100-க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வொஷிங்டன் போஸ்ட் அண்மையில் செய்தி வெளியிட்டது.

கன்சு மாகாணத்தில் உள்ள 119 கட்டுமான தளங்கள் அணுசக்தி ஏவுகணைகளுக்கான ஏவுதள வசதிகளை கொண்டிருப்பது போன்று செயற்கைக் கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையில் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடையே பேசிய அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், சீனாவின் அணு ஆயுத குவிப்பு குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அணு ஆயுத கட்டமைப்பை பலப்படுத்துவதில்,எதிர்பார்த்ததை விட சீனா மிக விரைவாக முன்னேறி வருகிறது எனவும் கூறினார்.

இதுபோன்ற ஆயுதக் குவிப்பை அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

அணுசக்தி அபாயங்களைக் குறைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை இது வலுவாக்குகிறது. பல தசாப்த கால அணுசக்தி கட்டுப்பாட்டு மூலோபாய கொள்கையில் இருந்து சீனா விலகிச் செல்வதை இது எடுத்துக்காட்டுகிறது எனவும் நெட் பிரைஸ் தெரிவித்தார்.

இதேவேளை, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனப் பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம் என்று எச்சரித்தாா்.

இந்நிலையில் இது அமெரிக்காவுக்கான மறைமுக எச்சரிக்கையாகக் கருதப்படுகிறதா? என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அவர், ஜி ஜின்பிங் கருத்துக்களை வெளியுறவுத்துறை கவனத்தில் எடுத்துள்ளது என்று கூறினார். ஆனால் அமெரிக்கா குறித்து நேரடியாக குறிப்பிடப்படாத இந்தப் பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் அவா் குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply