மிக வேகமாக “கொரோனா” வைரசு பரவல் நோர்வேயில் அவதானிக்கப்பட்டுள்ளதால், இதுவரை நடைமுறையில் இருந்துவந்த பரிந்துரைகளை மேலும் கடுமையாக்கியுள்ளதாக நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையார் நாட்டு மக்களுக்கு இன்று அறிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் அமுலுக்கு வரும் விதத்தில் கடுமையாக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி …
- தனியார் வீடுகளில், அந்தந்த வீடுகளின் நிரந்தர வதிவாளர்களை விட மேலதிகமாக 5 விருந்தினர்கள் மட்டுமே ஒன்று கூட முடியும். எனினும், விருந்தினர்களும், வீட்டின் நிரந்தர வதிவாளர்களும் ஒரே குடும்பத்தினராக இருக்கும் பட்சத்தில், அனுமதிக்கப்பட்ட 5 பேர்களுக்கும் அதிகமானவர்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதி உண்டு.
- பலர் ஒன்று கூடக்கூடிய உள்ளக மண்டபங்கள் மற்றும் இன்னோரன்ன உள்ளக பொது இடங்களில் 50 பேர் மட்டுமே ஒன்றுகூட முடியும்.
- பொது வெளிகளில், மைதானங்களில் 600 வரையிலானவர்கள் ஒன்றுகூட முடியுமென முன்னதாக பரிந்துரைக்கப்படிருந்தாலும், அனைவருக்கும் இருக்கைள் ஒழுங்கு செய்யப்பட வேண்டுமென தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- சிவப்பு அபாய வலயமாக கணிக்கப்படும் நாடுகளிலிருந்து, தொழில் வாய்ப்புக்களுக்காக நோர்வேக்குள் வருபவர்கள், கட்டாயமாக 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டுமெனவும், ஆகக்குறைந்தது 2 முறை தொற்றுக்கான பரிசோதனைகளுக்கு தோற்ற வேண்டுமெனவும், பரிசோதனைகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்திலேயே அவர்கள் தொழில் புரிய முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தலைநகர் ஒஸ்லோவிலும் நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக, ஒஸ்லோ மாநகரசபையின் நிர்வாகத்தலைவர் “Raymond Johansen” முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி …
- தலைநகர் ஒஸ்லோவில், பொது போக்குவரத்துக்களின்போதும், மக்கள் அதிகமாக கூடும் பல்பொருள் அங்காடித்தொகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முகக்கவசம் / வாய்க்கவசம் அணிவதோடு, 1 மீட்டர் இடைவெளி பேணப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- ஒஸ்லோவின் உணவகங்களில், இருக்கைகளில் அமர்ந்திருக்காத விருந்தினர்களும், உணவாக பணியாளர்களும் முகக்கவசம் / வாய்க்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- ஒஸ்லோவில் உள்ளக ஒன்றுகூடல்களில் ஈடுபடுவோரில், இருக்கைகள் இல்லாதவர்களின் தொகை 50 இலிருந்து 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- ஒஸ்லோவின் உணவகங்களில் இரவு 10 மணிக்கு பின்னதாக விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
- ஒஸ்லோவின் அலுவலக பணியாளர்கள், அலுவலகங்களுக்கு செல்லாமல், தத்தமது வீடுகளிலிருந்தபடியே இலத்திரனியல் உபகரணங்களின் மூலம் அலுவலக பணிகளை கவனிப்பதற்கு ஆவன செய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- ஒஸ்லோ நகரவாசிகள், வாரமொன்றுக்கு அதிகபட்சம் 10 பேர்களுக்கு மேல் தொடர்புகளை பேணுவது தவிர்க்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.