நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை தடுப்பூசி போடுமாறு கட்டாயப்படுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கேட்டுக்கொண்டுள்ளார். அல்லது வாரந்தோறும் கொரோனா சோதனை மேற்கொண்ட சான்றிதழை சமர்ப்பிக்கவும், மறுப்பு தெரிவிக்கும் நிறுவனங்கள் கடுமையான அபராதம் செலுத்த நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பைடன் நிர்வாகத்தின் இந்த அதிரடி அறிவிப்பால் சுமார் 100 மில்லியன் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றே தெரிய வந்துள்ளது. முன்னதாக, வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஊடகங்களிடம் கூறிய தகவலில், 2.5 மில்லியன் பெடரல் ஊழியர்களுக்கும் மற்ற வெளி ஒப்பந்தக்காரர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி பைடன் கையெழுத்திட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
நிர்வாக உத்தரவை ஒவ்வொரு முறை மீறும் தொழில் நிறுவனங்களுக்கு தலா 14,000 டொலர் அபராதம் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சுமார் 80 மில்லியன் அமெரிக்க மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
ஆனால் 177 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இருப்பினும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.
மட்டுமின்றி, இந்தியாவில் முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாடானது, அமெரிக்காவில் தடுப்பூசி போட்டவர்களுக்கும் அல்லாதவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவே கூறப்படுகிரது.
இதனால் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்புசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடர்பிலும் பைடன் நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.