தேர்தல் விதிமுறைகளை மீறி ஒட்டுக்குழு பிள்ளையான் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரச அதிகாரிகளை அடக்கி பல வேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஏறாவூர்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட சந்தனமடு ஆற்றுப்பகுதியை கடப்பதற்கான வள்ளம் ஒன்றினை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர் மூவரும் பிள்ளையானுக்கு ஆதரவாக செயல்படும் அரச அதிகாரிகள் இருவருமாகச் சென்று நேற்றைய தினம் கையளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையானின் அதிகார துஷ்பிரயோகம்
இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது நடக்குமா நடக்காதா என்று இருக்கின்ற வேளையில் தனது அரசியல் வங்குரோத்து காரணமாக உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தனது வேட்பாளர்களையும், ஆதரவான அரச அதிகாரிகளையும் வைத்து பிள்ளையானால் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் தேர்தல் விதிமுறைகளை மீறுகின்ற செயற்பாடாகவே நடந்து கொண்டிருக்கின்றது எனவும் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருக்கும் ஏறவூர்பற்று பிரதேச சபையின் பணம் மூலமே வள்ளம் செய்யப்பட்டு, மக்கள் பாவனைக்காக வழங்கப்பட இருந்த நிலையிலேயே, தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிள்ளையான் வழங்கியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த சில நாட்க்களாக இராஜாங்க அமைச்சர் சிநேசதுறை சந்திரகாந்தன் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி என்ன வேண்டும் என்றாலும் செய்வேன் என்ற தொனியில் பல மேடைகளில் கருத்து தெரிவித்து வந்திருந்தார் என்பதும் அதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே தற்போது சில நாட்களாக அரச அதிகாரிகள் பிள்ளையான் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நிலை காணப்படுகின்றது.
பிள்ளையானுக்கு ஆதரவாக செயல்படாத பிரதேச செயலாளர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரை மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவுடன் இணைந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
அதன் முதற்கட்டமாக பல அரச அதிகாரிகள், ஊடகங்கள் வாயிலாக பிள்ளையானுக்கு எதிராக, அவர் செய்த ஊழல்கள், அவர் செய்த கொலைகள், துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள் போன்ற விடயங்களை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
மாவட்டத்தை மீட்க போகிறோம் என்று வந்த பிள்ளையான் நேர்மையாக சேவை செய்யும் அரச அதிகாரிகளையும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவும் பிள்ளையானும் சேர்ந்து நேற்றைய தினமும் பிள்ளையானின் சகோதரி எனப்படும் ஒருவருக்கு 46 ஏக்கர் காணி வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் கிழக்கை மீட்போம் எனக்கூறி வந்த பிள்ளையான் தனது ஒட்டுக் குழுக்களை வைத்து உண்மைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களையும் ஊடகவியலாளர்களின் குடும்பங்களையும் அச்சுறுத்தும் கேவலமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு கொண்டு வருகின்றார் எனவும் பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்காகவும் தமிழ் இனத்துக்காகவும் தங்களது உயிரையும் துச்சமாக மதித்து சேவை செய்த பல ஊடகவியலாளர்களை பிள்ளையானும் பிள்ளையானோடு சேர்ந்த ஒட்டுக் குழுக்களும் சேர்ந்து கடத்தியும் காணாமல் ஆக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் அச்சுறுத்திய நிலையில், ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பும் அவரது துணைப்படையை வைத்துக்கொண்டு ஊடகவியலாளர்கள் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களுடன் நேரே நின்று ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க திராணியற்ற பிள்ளையான் இது போன்ற அடிமட்டத்தனத்தில் இறங்கி வேலை செய்வது மாவட்ட மக்கள் மத்தியில் கட்டும் விரத்தியையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
பிள்ளையான் தன்னுடைய அரசியல் அதிகாரத்தையும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் என்ற பேரையும் வைத்துக்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை தற்போது தெட்டத்தெளிவாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது எனவும் மாவட்ட மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தேர்தல் நடக்குமா இல்லையா என்பது மறுபுறம் இருக்க பிள்ளையானின் அராஜகமும் பிள்ளையானின் இந்த கடும் போக்கு நடவடிக்கையும் மாவட்ட மக்கள் மத்தியில் இன்று விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.