இந்திய இசை துறையின் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். தனது வசீகரமான குரலால் 70 ஆண்டுகள் இந்திய சினிமாவில் கோலோச்சியவர். லதா மங்கேஷ்கர் குரலுக்கு மயங்காதவர்களே இல்லை என கூறலாம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, 92 வயதான பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் நிமோனியா மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 8-ந் தேதி தென்மும்பையில் உள்ள பிரீச் கேன்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. கடந்த 29-ந் தேதி அவா் வென்டிலேட்டரில் இருந்து மாற்றப்பட்டார்.
உயிர் பிரிந்தது
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவர் மீண்டும் வென்டிலேட்டர் உதவியுடன் உயிர்காக்கும் சிகிச்சையில் வைக்கப்பட்டார்.
‘‘லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர் நேற்று முன்தினம் மாலை கூறியிருந்தார். இது அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. லதா மங்கேஷ்கர் விரைவில் குணமாக வேண்டும் என அவரது ரசிகர்கள் கோவில்களில் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே, சுப்ரியா சுலே எம்.பி., மத்திய மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்ட பிரபலங்கள் ஆஸ்பத்திரிக்கு படையெடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த நிலையில் நேற்று காலை 8.12 மணிக்கு லதா மங்கேஷ்கர் சிகிச்சை பலன் இன்றி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். உடல் உறுப்புகள் செயல் இழந்ததால், அவர் உயிர் இழந்ததாக டாக்டர்கள் கூறினர்.
குடும்பத்தினா் அஞ்சலி
இந்த தகவல் அறிந்து மும்பை மட்டும் இன்றி ஒட்டு மொத்த தேசமே சோகத்தில் மூழ்கியது. பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் தெரிவித்தனர்.
மேலும் மத்திய மந்திரி நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மந்திரி ஆதித்ய தாக்கரே, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பிரீச் கேன்டி ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். இதற்கிடையே லதா மங்கேஷ்கரின் உடல் மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர் மற்றும் நடிகர்கள் அமிதாப்பச்சன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சென்று லதா மங்கேஷ்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்
இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் வீட்டில் இருந்து தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்துக்கு அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் லதா மங்கேஷ்கரின் உடல் இறுதி ஊர்வலமாக புறப்பட்டது. அந்த வாகனத்தில் லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினர் இருந்தனர். அவரது உடல் தேசிய கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது.
லதா மங்கேஷ்கரின் உடல் ஊர்வலமாக சிவாஜி பார்க் மைதானத்திற்கு கொண்டு வரப்பட்ட போது திரளான பொதுமக்கள் பின்னால் அணிவகுத்து வந்தனர். வழிநெடுகிழும் பொதுமக்கள் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் அஞ்சலி
இந்த நிலையில் மாலை 5.40 மணிக்கு உடல் சிவாஜி பார்க் மைதானத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அங்குள்ள மேடையில் தலைவர்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது லதா மங்கேஷ்கரின் பாடல் மைதானத்தில் ஒலிக்கப்பட்டது.
இதேபோல அவரது படங்கள் மைதானத்தை சுற்றிலும் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் 6.20 மணிக்கு பிரதமர் மோடி சிவாஜி பார்க் மைதானத்திற்கு வந்தார். பின்னர் மோடி மலர் வளையம் வைத்து லதா மங்கேஷ்கர், உடலை சுற்றி வந்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே, மனைவி ராஷ்மி தாக்கரே, மகன் ஆதித்ய தாக்கரேவுடன் வந்து லதா மங்கேஷ்கரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து லதா மங்கேஷ்கர் குடும்பத்தினரிடம் பிரதமர் மோடி பேசினார். பின்னர் சற்று நேரம் அங்கு அமர்ந்து இருந்தார். தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய மந்திரி பியூஷ் கோயல், அஜித்பவார், ராஜ் தாக்கரே, சச்சின் தெண்டுல்கள் உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
உடல் தகனம்
பின்னர் இரவு 7 மணி அளவில் முப்படைகள் மற்றும் மாநில அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதே மைதானத்தில் தான் சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் உடல் தகனம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தாதர் சிவாஜி பார்க் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே மராட்டியத்தில் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (திங்கட்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.