ஆசிரியர் நியமனத்தில் திருகோணமலை புறக்கணிப்பு!

You are currently viewing ஆசிரியர் நியமனத்தில் திருகோணமலை புறக்கணிப்பு!

யானை – மொட்டு கூட்டணி அரசாங்கம், திருகோணமலை மாவட்டத்தை திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக, திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றஞ்சாட்டியுள்ளார். 

கிண்ணியாவில் நேற்று (14) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர்,  “இந்த அரசாங்கம், திருகோணமலை மாவட்டத்தை எந்தளவுக்குப் புறக்கணிக்கின்றது என்பதற்கு தற்போதைய கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனம் சிறந்ததொரு உதாரணமாகும்.

“திருகோணமலை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறை மிக அதிகளவில் காணப்படுகின்றன. கணித பாடத்துக்கு திருகோணமலை மாவட்டத்தில் 137 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதேபோல ஆரம்பக்கல்விக்கு 106 பற்றாக்குறையும், தமிழ்மொழி பாடத்துக்கு 78 பற்றாக்குறையும், புவியியல் பாடத்துக்கு 57 பற்றாக்குறையும் காணப்படுகின்றது. இவ்வாறே விஞ்ஞான பாடத்துக்கு 52 உம்,  தகவல் தொழில்நுட்ப பாடத்துக்கு 52 ஆசிரியர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது.

“இவ்வளவு பற்றாக்குறை இருந்தும் இம்முறை நியமனம் பெறுகின்ற திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நான் கல்வி அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினேன். கிழக்கு மாகாண ஆளுநருக்கும் தெளிவுபடுத்தினேன். பாராளுமன்றத்திலும் உரையாற்றினேன்.

“திருகோணமலை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க திருகோணமலை மாவட்ட ஆசிரியர்களை இம்மாவட்டத்திற்கே நியமிக்குமாறு கோரினேன்.  எனினும், திருகோணமலை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் அப்படியே இருக்க திருகோணமலை மாவட்ட கல்விக் கல்லூரி ஆசிரியர்களும் வேறு மாகாணங்களுக்கே நியமிக்கப்பட்டுள்ளனர்.

“திருகோணமலை மாவட்ட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தித்து, இம்மாவட்ட கல்வி பின்னடைவை சீர்செய்ய, இந்த அரசாங்கத்துக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

“இதனால் வேறு மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள குறித்த ஆசிரியர்களும், அவர்களது பெற்றோர்களும் பெரும் சிரமத்தை அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய வாழ்க்கைச் செலவுப் போராட்டத்துக்கு மத்தியில் இதன் தாக்கம் மிக அதிகம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” எனத் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments