கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கடந்த கடந்த மாதம் 26ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தைக் கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் நிமல் அமரசிறி பெப்ரவரி 27ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்த வியடம் தொடர்பாகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவரது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அகிம்சையாகவும் ஜனநாயக ரீதியாகவும் எதிர்ப்பினை வெளிப்படுத்தித் தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ரணிலின் முரட்டு அரசாங்கமும், அவரது பொதுஜன பெரமுனவின் நண்பர்களும், பொலிஸார் ஊடாக நடத்திய மிருகத்தனமான தாக்குதலைத் தமிழ் தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை தமிழ் மக்கள் நல்ல காரணத்திற்காகவே நிராகரித்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.